நியூயார்க்: அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் ஆளுநர் தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பரில் நடக்க உள்ளது. ஓஹியோ மாகாண ஆளுநர் தேர்தலில் இந்திய வம்சாவளியும் முன்னணி தொழிலதிபருமான விவேக் ராமசாமி போட்டியிடுகிறார். முன்னதாக இவர் கடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் டிரம்பை எதிர்த்து போட்டியிட்டார். அதில் தோல்வி அடைந்ததும், டிரம்பை ஆதரித்து அவருக்கு மிகவும் நெருக்கமானவரானார். இந்நிலையில் ஓஹியோ மாகாண ஆளுநர் தேர்தலில் போட்டியிடும் விவேக் ராமசாமிக்கு அதிபர் டிரம்ப் தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார்.
இது குறித்து டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக தள பதிவில், ‘‘விவேக் ராமசாமி ஓஹியோவின் சிறந்த ஆளுநராக இருப்பார். அவர் எனது முழுமையான ஒப்புதலை பெற்றுள்ளார். ஒருபோதும் உங்களை அவர் வீழ்த்த மாட்டார். விவேக்கை நான் நன்கு அறிவேன். அவர் சிறப்பானவர், இளமையானவர், வலிமையானவர், புத்திசாலி. அவர் மிகவும் நல்ல மனிதர். அமெரிக்காவை உண்மையிலேயே நேசிக்கிறார். உங்கள் அடுத்த ஆளுநராக அமெரிக்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்த அயராது பாடுபடுவார்’’ என கூறி உள்ளார். இதற்கு விவேக் ராமசாமி, டிரம்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

