பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள வங்கி முடக்கிய சொத்தை பதிவு செய்த அதிகாரிகள்: எச்சரித்த பிறகும் பதிவு செய்ததால் பரபரப்பு
சென்னை: கடலூர் நகரில் முக்கியமான பகுதிதான் வடக்குத்து. இந்தப் பகுதியில் உள்ள நிலத்தின் தற்போதைய மதிப்பு ஏக்கருக்கு ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் பகுதியில் பிரகாஷ் சந்த் ஜெயின் என்பவருக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.300 கோடிக்கு மேல் என்று கூறப்படுகிறது. அதில் பிரகாஷ் சந்த் ஜெயின், வங்கியில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இவர், கடலூர் மட்டுமல்லாது காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் ஏராளமான நிலங்கள் வாங்கி குவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடலூர் வடக்குத்து என்ற பகுதியில் உள்ள நிலத்தை பிரகாஷ் சந்த் ஜெயின், எஸ்பிஐ வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் பணத்தை திருப்பிக் கட்டாததால், அந்த சொத்தை வங்கி அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இதை விற்பனை செய்யக்கூடாது என்று கடலூர் பதிவுத்துறை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், வங்கியின் தகவலை மீறி பதிவுத்துறை அதிகாரிகள், பிரகாஷ் சந்த் ஜெயின், ஜெயப்பிரியா சிட்பன்ட்ஸ் என்ற நிறுவனத்திற்கு பொது அதிகார பத்திரம் செய்து கொடுத்துள்ளனர். தற்போது அந்த சொத்தை அந்த நிறுவனத்திற்கே விற்பனை செய்ய பிரகாஷ் சந்த் ஜெயின் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தெரிந்ததும், வங்கி அதிகாரிகள் பதிவுத்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர். இந்த தகவல் தெரிந்ததும், உளவுத்துறை போலீசாரும் கடலூரில் முக்கிய பகுதியில் உள்ள நில விற்பனை தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்திருந்தனர். இதனால் உளவுத்துறை அதிகாரிகள், இது குறித்து பதிவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.
இது தெரிந்ததும், கடலூர் பகுதியின் டிஐஜி கவிதா ராணி, மாவட்ட பதிவாளர் தனலட்சுமி ஆகியோரை நேரில் அழைத்து, எச்சரிக்கை செய்து அனுப்பியிருந்தனர். இந்தநிலையில் கடலூர் சார்பதிவாளர் பதவி காலியாக இருந்ததால், மலர்கொடி என்பவரை 15 நாட்களுக்கு முன்பு பணி நியமனம் செய்திருந்தனர். ஆனால் அவர் பணியில் உடனடியாக சேர வேண்டாம் என மாவட்ட பதிவாளர் மலர்கொடி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. அவர் தனக்கு வேண்டிய உதவியாளர் சுரேஷ் என்பவரை நியமித்து, பதிவு பணிகளை கவனிக்கும்படி கூறியுள்ளார்.
மேலும் மலர்கொடியின் கணவர், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் முக்கிய பதவியில் இருப்பதால் அவர் சொல்வதை மீறி அந்தப் பகுதியில் பதிவுத்துறையில் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், உளவுத்துறை எச்சரிக்கை மற்றும் பதிவுத்துறை உயர் அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி எஸ்பிஐ வங்கி முடக்கி வைத்திருந்த சொத்தை பிரகாஷ் சந்த் ஜெயின் விற்பனை செய்யும் பதிவை அதிகாரிகள் செய்துள்ளனர்.
இது கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது. தஞ்சை பகுதியில் தொடர்ந்து போலியான பதிவுகள் நடைபெறுவதாகவும், முறைகேடுகள் நடைபெறுவதாகவும் ஆதாரத்துடன் செய்தி வெளியாகிய பிறகும் பதிவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.