25 உயிர்களை காவு வாங்கிய பிறகும் அதிகாரிகள் அலட்சியம் கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் மேம்பால பணிகள் மந்தம்
* பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி
சின்னசேலம் : கள்ளக்குறிச்சி புறவழிச்சாலை இந்திலி பஸ்நிறுத்த பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிகள் மந்தகதியில் நடந்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி அருகே இந்திலி முருகன்கோயில் பகுதியில் சாலையை கடக்கும்போது அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. இதுவரை இந்த இடத்தில் மட்டும் 25க்கும் மேற்பட்டோர் விபத்தில் இறந்துள்ளனர்.
மேலும் இந்த பகுதியில் இரண்டு தனியார் கல்லூரிகள் உள்ளன. அந்த மாணவர்களும் சாலையை கடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் இந்த இடத்தில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் மேம்பாலம் கட்ட முடிவு செய்து அதற்கான பணிகளை கடந்த 3 மாதத்திற்கு முன்பு தொடங்கி உள்ளது.
அதாவது சாலையை அகலப்படுத்தி இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்க ஒரு அடி ஆழத்திற்குமேல் பள்ளம் தோண்டி, கான்கிரீட் கலவை கொட்டி சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த சாலைப்பணி துவங்கி சுமார் 3 மாத்திற்குமேல் நடந்து வரும் நிலையில் தற்போது வரை சர்வீஸ் சாலை மட்டுமே போட்டு வருகின்றனர்.
இந்த சர்வீஸ் சாலை அமைக்கும் பணி முடிவடைந்தால், போக்குவரத்தை இதில் திருப்பிவிட்டு, நடுவில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படும். மேலும் இந்த பாலம் சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்படும் என்றும் நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.
இந்த பகுதியில் தொடர் விபத்து நடந்து வரும் நிலையில், அப்பகுதியில் சர்வீஸ் சாலையுடன் மேம்பாலம் அமைக்கப்பட்டால், விபத்துகள் முழுவதுமாக குறைந்து விடும். பொதுமக்கள், மாணவர்கள் சுலபமாக சென்று வர முடியும். ஆனால் இந்த இடத்தில் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி படுமந்தமாக நடந்து வருகிறது. பெயரளவில் மட்டும் ஒன்றிரண்டு தொழிலாளர்களே வேலை செய்து வருகின்றனர்.
இதனால் சர்வீஸ் சாலைகள் அமைக்கவே இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகும் என தெரிகிறது. இப்பகுதியில் சர்வீஸ் சாலை கட்டி முடிக்கப்பட்ட பிறகு, பாலம் கட்டுமான பணி முடிய குறைந்தது 4 மாதங்களுக்கு மேல் ஆகும். எனவே கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், அதிக தொழிலாளர்களை வைத்து, மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.