அதிகாரிகளின் ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூட வேண்டும்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
சென்னை: கடந்த 2023ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் உள்ள, கங்கர்செவல் கிராமத்திலுள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியானார்கள். இதுதொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யா நாராயாணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு, விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்துகள் நிகழ்ந்து தொழிலாளர்கள் பலியாவது மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும் விசாரணை வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகநாதன், ஆலைகளை ஆய்வு செய்ய அதிகாரிகள் செல்லும்போது, பட்டாசு ஆலை உரிமையாளர்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்காமல் ஆலைகளை மூடி விட்டு சென்று விடுவதாக தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கத்தையும், தொழிலாளர் நலத்துறை செயலாளரையும் சேர்க்க உத்தரவிட்டனர். ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகளுக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்காமல் மூடும் ஆலைகளை, தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 29ம் தேதி ஒத்திவைத்தனர்.