Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

மதுரை:கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை சேர்ந்த கோபிநாத், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி குறிகாரன் வலசை, கீழ்பாகம் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பஞ்சாயத்துகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் (100 நாள் வேலைத்திட்டம்) கீழ் பணிகள் நடைபெறுகின்றன. இந்தப்பணிகளை பணித்தள பொறுப்பாளராக இருந்து கண்காணிப்பவர், முறைகேடாக கிராமத்தில் இல்லாதவர்கள், வடமாநிலத்தவர்கள், இறந்தவர்கள் மற்றும் வெளியூரில் வசிப்பவர்களின் பெயர்களை இணைத்து ஊதியம் வழங்கியதாக ரூ.5 கோடி வரை மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

பணித்தள பொறுப்பாளரின் மோசடிக்கு பலர் உடந்தையாக உள்ளனர். ஒன்றிய அரசின் ஜல்ஜீவன் திட்டப்பணிகள் மூலம் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குடிநீர் குழாய் இணைப்பு பணிகளுக்கு ரூ.1,200 கட்டணம் நிர்ணயித்துள்ள நிலையில், பொதுமக்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் வரை வசூலிக்கின்றனர். பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இதுபோன்ற முறைகேடுகள் அதிகம் நடைபெற்றுள்ளது.

எனவே, இந்த மோசடி குறித்து சிபிஐ லஞ்ச ஒழிப்பு பிரிவு விசாரிக்கவும், சம்பந்தப்பட்டோரிடம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை கண்காணிக்கும் உயரதிகாரிகள் முதல் கீழ்நிலை அலுவலர்கள் வரை, முறையாக கண்காணிப்பதும், பொறுப்பை உணர்ந்து பணிகளை செய்வதும் கிடையாது. இது அதிகாரிகளின் மோசமான நடவடிக்கை. இதுபோன்ற திட்டங்களை வைத்து ஊராட்சி தலைவர்கள் கொள்ளையடிப்பதையும், ஊழல் செய்வதையுமே நோக்கமாக கொண்டுள்ளனர்’’ என்றனர். பின்னர் மனுவிற்கு சிபிஐ லஞ்ச ஒழிப்பு பிரிவு, கரூர் கலெக்டர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.