ஒடுகத்தூர்: ஒடுகத்தூர் வாரச்சந்தையில் இன்று ரூ.22 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு வெளியூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் ஆடுகளை விற்கவும், வாங்கவும் வருகின்றனர்.
அதன்படி இன்று வழக்கம்போல் சந்தை கூடியது. ஆனால் கடந்த 2 மாதங்களாக ஆடுகளின் வரத்து அதிகரித்து, விற்பனையும் ஜரூராக நடந்தது. இன்று ஆடுகளின் வரத்து வெகுவாக குறைந்திருந்தது. ஆடுகளின் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்தது. ஒரு ஜோடி ஆட்டின் விலை ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை விற்கப்பட்டது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், வழக்கமாக ஆடுகள் வரத்து இல்லை என்றால் விலை குறைந்து வியாபாரமும் மந்தமாக இருக்கும். ஆனால் இன்று ஆடுகள் வரத்து குறைந்திருந்தபோதும் விலை உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.22 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.