ஒடிசாவில் இருந்து கடத்தி வந்து கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது: பூந்தமல்லியில் 21 கிலோ பறிமுதல்
பூந்தமல்லி: ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்ற 3 வடமாநில வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பூந்தமல்லி அடுத்த வெளியூர் பேருந்து நிலையத்தில் இருந்து கஞ்சா கடத்தப்படுவதாக பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் சுபாஷினி தலைமையில் உதவி ஆய்வாளர் நாட்டாளம்மை உள்ளிட்ட போலீசார், பேருந்து நிலைய பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்குள்ள காலி இடத்தில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். முன்னுக்குப்பின் முரணாக கூறியதால் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தபோது அதில் 21 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சிபா பெகரா (31), ராமகண்டா மஜ்கி (32), அலேகா புன்ஜி (28) என்பதும், ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் விற்பனை செய்ய இருந்ததும், வடமாநில தொழிலாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா கடத்தலில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பூந்தமல்லி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.