டெல்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசையில் விராட் கோலி 2வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 302 ரன்கள் எடுத்த கோலி, தற்போது ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக தொடர்ந்து உள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் உட்பட விராட் கோலி 302 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அவர் தொடர் நாயகன் விருதையும் பெற்றார். அபார ஆட்டத்தின் விளைவாக விராட் கோலி நான்காவது இடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு உயர்ந்துள்ளார்.
ஓடிஐ பேட்டர்களுக்கான ஐசிசியின் தரவரிசையில் 773 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும், ரோஹித் சர்மா 781 புள்ளிகளுடன் முதலிடத்திலும் உள்ளனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ரோஹித் சர்மாவின் 146 ரன்கள் அவர் தனது முதலிடத்தைத் தக்கவைக்க உதவியுள்ளன.
மேலும் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் நான்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் முதல் 10 இடங்களில் உள்ளனர். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களில் உள்ளனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரைத் தவறவிட்ட ஷுப்மான் கில், தனது ஐந்தாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். ஷ்ரேயாஸ் ஐயர், அவர் ஒரு இடம் சரிந்து 10வது இடம் பிடித்துள்ளார். கே.எல். ராகுல் இரண்டு இடங்கள் முன்னேறி, ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் 12வது இடத்தைப் பிடித்துள்ளார்.


