Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அக்டோபர் மாதம் அறிமுகமாக இருந்தது; தாமதமாகும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்: தர குறைபாடுகளை சரிசெய்ய ரயில்வே உத்தரவு

சென்னை: அக்டோபர் மாதத்தில் அறிமுகமாக இருந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தர குறைபாடுகள் காரணமாக அறிமுகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் படுக்கை வசதி கொண்ட, அதிவேக ரயில் சேவையாகும். இது நீண்ட தூர பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் மாதிரி செப்டம்பர் 2024ல் வெளியிடப்பட்டது. மேலும் இந்த ரயில்கள் செப்டம்பர் 2025ல் அறிமுகப்படுத்தப்பட திட்டமிடப்பட்டது. இதில் ஏசி பெட்டிகள், வெந்நீரில் குளிக்கும் வசதி மற்றும் புத்தகங்கள் வாசிக்க வசதியான லைட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ரயில்கள் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இயக்கப்படும். அதிகபட்ச வேகம் மணிக்கு 180 கி.மீ. ரயிலுக்குள் நவீன முறையில் உட்புற அமைப்பு, வசதியான இருக்கைகள், தண்ணீர் பாட்டில் வைக்கும் இடம், சார்ஜிங் பாயிண்ட் போன்ற வசதிகள் உள்ளன. இந்த ரயில்களின் புகைப்படங்கள் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. குறிப்பாக, அக்டோபர் மாதத்தில் அறிமுகமாக இருந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள், உள்துறை அமைப்பு மற்றும் வேலைத்திறன் குறைபாடுகள் காரணமாக தாமதமாகலாம் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ரயில் இயக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரயில்வே வாரியம், ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பின் இயக்குநர் மற்றும் அனைத்து ரயில்வே மண்டல பொது மேலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் பல குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளது. அதில், முக்கிய பிரச்னைகளாக படுக்கை அமைப்புகளில் உள்ள சில மூலைகள் மற்றும் முனைகள் கூர்மையாக இருப்பதால் பயணிகளுக்கு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜன்னல் திரைச் சீலைகளைப் பிடிப்பதற்கான கைப்பிடிகள் சரியாக வடிவமைக்கப்படவில்லை. படுக்கை இணைப்புகளுக்கு இடையே உள்ள சில இடைவெளிகள் காரணமாக, அந்த பகுதிகளைச் சுத்தம் செய்வதிலும், பராமரிப்பதிலும் சிக்கல்கள் எழும்.

அவசர கால அலாரம் பொத்தான்கள் சில இடங்களில் மறைவாக இருப்பதால், பயணிகள் உடனடியாக அதைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. முதல் வகுப்பு ஏசி கோச்சுகளில் ஏசி குழாய் தரையின் மூலையில் அமைந்திருக்கிறது போன்ற தவறுகளை ரயில்வே நிர்வாகம் சுட்டிகாட்டியுள்ளது. 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலுக்கு கொள்கை ரீதியான அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், சேவையில் இறங்குவதற்கு முன் சில குறைபாடுகள் சரிசெய்யப்பட வேண்டும் என்று அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, கட்டாய பாதுகாப்பு நடவடிக்கைகளாக தீ பாதுகாப்பு நெறிமுறைகள், கவச் 4.0 ரயில் பாதுகாப்பு அமைப்பு நிறுவல், ரயில் ஓட்டுநர், மேலாளர் மற்றும் நிலைய தலைவர் இடையே நம்பகமான தொடர்பு, பிரேக் அமைப்புகளின் சரியான பராமரிப்பு, வெப்பநிலை கட்டுப்பாடு, அவசர காலத்தில் 15 நிமிடங்களுக்குள் பெட்டிகளை பிரிக்கும் வசதி மற்றும் பயணிகளின் வசதிக்காக ஏற்ற வெப்பநிலை பராமரிப்பு போன்ற விஷயங்களையும் வலியுறுத்தியுள்ளது. மேலும் அடுத்தடுத்து தயாரிக்கப்படவுள்ள ரயில்களில் இந்த குறைபாடுகள் மீண்டும் நிகழாதவாறு வடிவமைப்பில் தேவையான மாற்றங்களைச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரயில் புறப்படுவதற்கு முன் பயணிகள் அல்லாத அனைவரும் இறங்க வேண்டும் என்பதை தொடர்ந்து அறிவிக்க வேண்டும். பயணத்தின் போது மூன்று மொழிகளில் (பிராந்திய மொழி, இந்தி மற்றும் ஆங்கிலம்) பயணிகள் பாதுகாப்பு அறிவிப்புகள் முன்பதிவு செய்யப்பட்ட குரலில் ஒலிபரப்பப்பட வேண்டும் என்றும், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களின் பராமரிப்புக்கு தகுதியான மற்றும் பிரத்யேக ஊழியர்களை நியமிக்குமாறும், போதுமான உதிரி பாகங்கள் மற்றும் பராமரிப்புக்கு தேவையான பொருட்களை வைத்திருக்குமாறும் அமைச்சகம் அனைத்து மண்டலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்படும் வழித்தடம் இன்னும் இறுதி செய்யப்படாததால், அக்டோபர் 28ம் தேதி அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே அமைச்சகத்தின் கடிதம் அனுப்பப்பட்டது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முன்னதாக அக்டோபர் மாதத்தில் ரயிலை அறிமுகப்படுத்துவதாக குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது இந்த குறைபாடுகள் சரி செய்யப்படும் வரை தொடக்கம் தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இந்த சிக்கல்கள் சரிசெய்யப்பட்டு, ரயில்வே பாதுகாப்பு ஆணையரிடம் இருந்து இறுதி ஒப்புதல் பெற்ற பின்னரே, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் வணிக ரீதியில் இயக்கப்படும் என்பதால் இதன் தொடக்க தேதி மேலும் தாமதமாகியுள்ளது.