பெரியபாளையத்தில் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள பைக்குகள்: ஓட்டுநர்கள் கடும் அவதி; அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என எதிர்பார்ப்பு
ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பைக்குகளை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பாரகளா? என பயணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பெரியபாளையம் ஊராட்சியில் விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், மாணவ-மாணவிகள் என 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். மேலும், இங்கு புகழ் பெற்ற பவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திரா, கேரளா என பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.
மேலும், பெரியபாளையத்தை சுற்றி ஆத்துப்பாக்கம், அரியப்பாக்கம், தும்பாக்கம், தண்டலம், ஏனம்பாக்கம், கல்பட்டு என 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் வேலை, வியாபாரம், படிப்பு சம்மந்தமாகவும், பெரியபாளையம் பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கிருந்து சென்னை, பெருமந்தூர், ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இவர்களின் வசதிக்காகவும், செங்குன்றம், மாதவரம், ஆவடி மற்றும் ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், பொன்னேரி போன்ற போக்குவரத்து பணிமனைகளிலிருந்து தினமும் 50க்கும் மேற்பட்ட மாநகர மற்றும் விழுப்புரம் கோட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்துகள் பெரியபாளையம் பேருந்து நிலையத்திற்கு உள்ளே வந்து செல்கிறது. அவ்வாறு வரும் பேருந்துகள் நிலையத்தில் நுழையும் இடத்தில், பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு வரும் நபர்களும், வெளியூருக்கு செல்லும் நபர்களும் தங்களின் பைக்குகளை பேருந்து நிலையத்திலேயே விட்டுச்செல்கிறார்கள். இதனால், பேருந்து நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டு, பேருந்துகளை திருப்ப முடியாமல் டிரைவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே, பேருந்து நிலையத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள பைக்குகளை அகற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பெரியபாளையம் பேருந்து நிலையம் உள்ளது. இந்த நிலையம் மிகவும் குறுகலான பேருந்து நிலையம் ஆகும். இந்த வழியாக ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான பேருந்து, கார், வேன் மற்றும் லாரி என பல்வேறு வாகனங்கள் சென்னையிலிருந்து ஆந்திராவுக்கும், ஆந்திராவிலிருந்து சென்னைக்கும் சென்று வருகிறது. மேலும், ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், பொன்னேரி ஆகிய பணிமனைகளிலிருந்து இயக்கப்படும் விழுப்புரம் கோட்ட பேருந்துகள், குறுகிய பேருந்து நிலையம் என்பதால் நிலையத்திற்கு உள்ளே செல்வது கிடையாது.
வெளியிலேயே நின்று செல்கிறது. மாநகர பேருந்துகள் மட்டுமே குறுகலான பேருந்து நிலையத்திற்கு உள்ளே செல்கிறது. அவ்வாறு செல்லும் பேருந்துகள் கூட நிலையத்திற்கு உள்ளே செல்லும்போது, நிலையத்தில் ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பைக்குகளால் பேருந்தை திருப்புவதற்கு ஓட்டுநர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, பேருந்து நிலையத்திற்கு உள்ளே ஆக்கிரமித்துள்ள பைக்குகளை அகற்றவேண்டும். மேலும் நாளுக்கு நாள் பெரியபாளையம் பகுதி வளர்ந்து வரும் ஊராட்சியாக உள்ளதால் பெரியபாளைத்தின் வேறு பகுதியில் மற்றொரு பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்’ என்றனர்.


