Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

10வது சர்வதேச யோகா தினத்தையொட்டி மதுராந்தகம் விவேகானந்தா பள்ளியில் ஆயிரம் மாணவர்கள் யோகாசனம் செய்து அசத்தல்

மதுராந்தகம்: 10வது சர்வதேச யோகா தினம் முன்னிட்டு மதுராந்தகம் விவேகானந்தா பள்ளியில் ஆயிரம் மாணவர்கள் யோகாசனம் செய்து அசத்தினர். மதுராந்தகத்தில் உள்ள விவேகானந்தா வித்யாலயா சிபிஎஸ்சி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சார்பில் 10வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நேற்று காலை பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் லோகராஜ் தலைமை தாங்கினார். சிபிஎஸ்சி பள்ளி தாளாளர் ஹரினாக்ஷி, முதுநிலை முதல்வர் மங்கையர்கரசி, முதல்வர் திலகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துணை முதல்வர் கீதா அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி டீன் ராமசாமி கலந்துகொண்டு யோகாசனம் செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சூரிய நமஸ்காரத்துடன் தாடாசனம், பத்மாசனம், திரிகோணாசனம், புஜங்காசனம், வீரபத்ராசனம், உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட யோகாசனங்கள் தொடர்ந்து ஒரு மணி நேரம் செய்து அசத்தினர்.

இதனைத்தொடர்ந்து, யோகாசன போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதனையடுத்து, இதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த மதுராந்தகத்தை சேர்ந்த துர்கா குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். இதனை பாராட்டி பள்ளி நிர்வாகம் சார்பில் துர்காவிற்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் சிபிஎஸ்சி பள்ளி முதல்வர் சீதாலட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விவேகானந்தா குழும பள்ளி நிர்வாகம் செய்திருந்தது.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சர்வதேச யோகா தினம் கல்லூரி முதல்வர் ஜோதிகுமார் தலைமையில் நேற்று சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த யோகா தின கொண்டாட்டத்தில் பல வகையான யோகாசனங்கள் செய்து அசத்தினர். இந்நிகழ்ச்சியில், கல்லூரி துணை முதல்வர் அனிதா, மருத்துவர் செல்லின், செவிலியர் கல்லூரி முதல்வர் நித்தியானந்தம், யோகா ஒருங்கிணைப்பாளர் தேவி மற்றும் செவிலியர் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் உள்ள காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு யோக பயிற்சி செயல்முறையுடன் கல்லூரி கலையரங்கத்தில் நேற்று நடத்தப்பட்டது. இதில், நிறுவனர் போஸ் தலைமை தாங்கினார். காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளையின் தாளாளர் அரங்கநாதன், தலைவர் ஜெயக்குமார், செயலாளர் வீரராகவன், பொருளாளர் மல்லிகா மாதவன் மற்றும் இயக்குநர்கள் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். இதில், கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நேற்று காலை தொல்லியல் துறை சார்பில் நடந்த யோகா தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாமல்லபுரத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி மோகன் என்பவர் பள்ளி மாணவர்கள், பெரியவர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் தொல்லியல் துறை ஊழியர்களுக்கு யோகா பயிற்சியை கற்று கொடுத்து அசத்தினார். இதனைக் கண்ட பொதுமக்கள் அவரைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்தனர். இதில், பள்ளி மாணவர், பொதுமக்கள் என 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்போரூர்: சென்னை அருகே முட்டுக்காட்டில் மாற்றுத்திறனாளிகள் தேசிய நிறுவனத்தில் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் சர்வதேச யோகா தினத்தை அனுசரிக்கும் விதமாக ஜூன் 15 முதல் 21 வரை பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில், நிறுவனத்தின் துணை பதிவாளர் (பொறுப்பு) அமர்நாத், சிறப்பு கல்வி துறை தலைவர் காமராஜ், பல்வகை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளியின் முதல்வர் லீலாவதி, யோகா பயிற்சியாளர் பிரேமா, நிப்மேட் அலுவலர்கள், பெற்றோர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.