கீழ்பென்னாத்தூர் : திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் முக்கிய திருவிழாவான திருக்கார்த்திகை தீபத்திருவிழா வரும் 3ம் தேதி நடைபெற உள்ளது.
கார்த்திகை தீபத்திருநாளில் மக்கள் தங்களது வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். அவ்வாறு ஏற்றப்படும் தீபத்தின் மூலம் அண்ணாமலையார் வீடுகளில் எழுந்தருளி அருள்பாலிப்பார் என்பது ஆன்மிக நம்பிக்கை.
இந்நிலையில், திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னத்தூர் வட்டம், வேளானந்தல் கிராமத்தில் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தீபத்திருவிழாவுக்கு இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில் மண்பாண்ட தொழிலாளர்கள் மண்ணை பிசைந்து பதப்படுத்தி அகல் விளக்குகள் செய்து வருகின்றனர். தற்போது மழை இல்லாத காரணத்தினால் அகல் விளக்குகள் உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாகவும், மழை வந்தால் விளக்குகள் உற்பத்தி செய்யும் பணி பாதிப்படையும் என்பதால் முன்னதாகவே தயாரித்து வெயிலில் காய வைத்து பாதுகாத்து வைப்பதாகவும் மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
நவீன கால வளர்ச்சி காரணமாக அச்சு விளக்குகள், பிளாஸ்டிக் விளக்குகள், பீங்கான் விளக்குகள் வந்தாலும், தங்களது வாழ்வாதாரத்துக்காக அகல் விளக்குகளை தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



