உடுமலை : நவராத்திரியை முன்னிட்டு உடுமலையில் கொலு பொம்மைகள் விற்பனை துவங்கியுள்ளது.நவராத்திரி பண்டிகை வரும் அக்டோபர் 1, 2-ம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அதற்கு 10 நாட்களுக்கு முன்பே வீடுகளில் கொலு பொம்மைகளை வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
முதல் மூன்று நாட்கள் இந்து சமயத்தில், சக்தியின் அம்சங்களாக கருதப்படும் துர்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும் கடைசி மூன்று நாட்கள் சரசுவதிக்கும் சிறப்பு பூஜைகள் செய்து கொண்டாடப்படுகிறது.
பத்தாவது நாள் வெற்றியைக் குறிக்கும் நாளாக “விஜய தசமி” என்று கொண்டாடப்படுகிறது. கொலுவில் கடவுள் சிலைகளுடன், மனிதனின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை சித்தரிக்கும் பொம்மைகளும் இடம் பெறுகின்றன.
இந்து சமய புராணங்களைச் சித்தரிக்கும் பொம்மைகள்,தேரோட்டம், கடவுள்களின் ஊர்வலம், அணிவகுப்பு, திருமண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் பொம்மைகள், சிறிய அளவிலான சமையலறை சொப்பு சாமான்கள்,விலங்குகள், மரங்கள் மற்றும் பறவைகள் பொம்மைகளும் இடம் பெறுகின்றன.
கொலுவில் மரப்பாச்சி பொம்மை முக்கிய இடம் வகிக்கிறது.இவை சந்தன மரம் அல்லது தேக்கு மரத்தினால் செய்யப்பட்ட ஆண் மற்றும் பெண் உருவ பொம்மைகளாகும்.
நவராத்திரி பத்து தினங்களும் மாலை வேளையில் வண்ண கோலம் இட்டு, குத்து விளக்கேற்றி, சக்தி தேவியின் தோத்திரப் பாடல்களை பாடி மகிழ்வார்கள். கொலு வைத்துள்ள வீட்டிற்கு, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தினமும் மாலை வேளையில் வருகை புரிந்து பக்திப் பாடல்களை பாடுவதும், புராணங்கள் வாசிப்பதும் நடைமுறையாக உள்ளது.
பின்னர் கடவுளுக்கு படைக்கப்பட்ட இனிப்பு மற்றும் பலகார வகைகளை வீட்டிற்கு வந்தவருக்கு கொடுத்து உபசரிப்பார்கள்.உடுமலையில் கடை வீதிகளில் கொலு பொம்மைகள் விற்பனை துவங்கியுள்ளது. விதம் விதமான பொம்மைகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.