என்ன இடையூறு வந்தாலும் விடாமுயற்சியை கைவிடாதீர்கள்: விளையாட்டு வீரர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுரை
சென்னை: என்ன இடையூறு வந்தாலும் விளையாட்டு வீரர்கள் விடாமுயற்சியை கைவிடாதீர்கள். உங்களுக்கு முதல்வரும், நானும் உறுதுணையாக இருப்போம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தார். சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்த 2024-25ம் கல்வியாண்டில் சர்வதேச, தேசிய, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் இருந்து இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் காண்பதற்கு, இதுபோன்ற நிகழ்ச்சிகள் மிகப்பெரிய அளவில் கைகொடுக்கின்றன. பாடப் புத்தகத்தில், பாடத்திட்டத்தில் இருந்து கிடைக்கின்ற கல்வி மட்டுமல்ல, விளையாட்டின் மூலமும் நிறைய விஷயங்களை மாணவர்கள் கற்றுக் கொள்ள முடியும். கூட்டுறவு, குழுப்பணி, நம்பிக்கை, நட்பு, உத்தி, திட்டமிடல், செயல்படுத்தல் என வாழ்க்கைக்கு தேவையான அத்தனை குணங்களையும் நமக்கு விளையாட்டு கற்றுக் கொடுக்கிறது.
சாதாரணமாக பாடப்புத்தகத்தை மட்டும் படிக்கிறபோது, இதையெல்லாம் கற்றுக் கொள்ள முடியாது. எனவே, படிப்பிலும், விளையாட்டிலும் ஈடுபடக் கூடிய மாணவர்கள் நீங்கள் எப்போதுமே தனிச் சிறப்போடு இருப்பீர்கள்.கல்வியிலும் கவனம் செலுத்த வேண்டும், அதே நேரத்தில் விளையாட்டிலும் உங்களுடைய கவனம் இருக்க வேண்டும். எப்போதாவது விளையாட்டு மைதானம் பக்கம் தலைகாட்டினால் போதுமென்று மட்டும் இருந்து விடக்கூடாது.
நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்யும்போது, கொஞ்சம் கொஞ்சமாக உங்களுடைய திறமை உங்களை அறியாமலேயே அது கூடிக்கொண்டே போகும். நீங்கள் அடுத்தடுத்த உயரங்களை தொடுவதற்கு தொடர்ந்து நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும். மென்மேலும் போட்டிகளில் அதிகமாக பங்கேற்க வேண்டும். விளையாட்டை பொறுத்தவரைக்கும் வெற்றி எவ்வளவு முக்கியமோ விடாமுயற்சியும் அதே அளவுக்கு முக்கியம்.
ஆகவே, என்ன இடையூறு வந்தாலும், உங்களுடைய விடாமுயற்சியை நீங்கள் தயவு செய்து கைவிடாதீர்கள். உங்களுக்கு அனைத்து வகையிலும், துணை நிற்க முதல்வரும், திராவிட மாடல் அரசும், விளையாட்டு துறையும் இருக்கிறது. நானும் என்றைக்கும் உங்களுடைய குடும்பத்தில் ஒருத்தனாக, உங்களுடைய அண்ணனாக உங்களுடைய எல்லா முயற்சிக்கும் துணை நிற்பேன். இவ்வாறு அவர் பேசினார்.
* விளையாட்டு வகுப்பை கடன் வாங்காதீர்கள்
பல நிகழ்ச்சிகளில் உங்களிடம் பலமுறை நான் சொல்லியிருக்கிறேன். அதாவது மாணவர்களின் சார்பாக ஆசிரியர்களிடம் ஒரே ஒரு கோரிக்கை தான். விளையாட்டு வகுப்பை எந்த டீச்சரும் தயவு செய்து கடன் வாங்கி அதில் பாடம் நடத்தாதீர்கள். பள்ளி கல்வித்துறை அமைச்சரையும் வைத்துக் கொண்டு தான் இந்த கோரிக்கையை வைக்கிறேன். வேண்டுமென்றால், அறிவியல், கணித ஆசிரியர்கள் உங்களோட பாடநேரத்தில் மாணவர்களுக்கு தயவு செய்து விளையாட்டு பாட நேரத்திற்கு கடன் கொடுங்கள்.
ஏனென்றால் விளையாட்டு பாட நேரத்திற்கு என்பது ஒவ்வொரு மாணவருடைய உரிமை. அதில் நிச்சயமாக நீங்கள் விளையாட வேண்டும். விளையாட்டு பயிற்சிக்கு நீங்கள் அதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
* 5,788 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வி துறையின் சார்பில் குறுவட்டம், மாவட்டம், மாநில அளவில் மாணவ, மாணவிகளுக்கு 14, 17, 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் ஆண்டுதோறும் மொத்தம் 26 வகையான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. 2024-25ம் கல்வியாண்டில் சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று 76 தங்கம், 26 வெள்ளி, 24 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 126 பதக்கங்களை வென்றுள்ளனர்.
தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் மணவ, மாணவிகள் பங்கேற்று 348 தங்கம், 236 வெள்ளி, 333 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 917 பதக்கங்களை வென்றுள்ளனர். மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 1,484 தங்கம், 1,522 வெள்ளி, 1,739 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 4,745 பதக்கங்களை வென்றுள்ளனர்.
இந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மொத்தம் 5,788 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். விழாவில் மாணவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்ட உடற்கல்வி ஆசிரியர் வளநூல் எனும் புத்தகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.