வீட்டில் தாயாரை கவனிக்க வந்த நர்சுக்கு பாலியல் தொல்லை முன்னாள் டீன் மீது வழக்கு: மருத்துவமனையிலும் பெண்களிடம் சில்மிஷம், காவல்நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
நாகர்கோவில்: வீட்டில் தாயாரை கவனிக்க வந்த நர்சுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் டீன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி காவல்நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிந்து முன்னாள் டீன் மீது விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீனாக இருந்து ஓய்வு பெற்றவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் (64). இவர் நாகர்கோவில் புன்னை நகர் பகுதியில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனையின் பின்புறம் தான், அவரது வீடும் உள்ளது.
இந்த மருத்துவமனையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த 19 வயது இளம்பெண், நர்சாக பணியாற்றுகிறார். ராதாகிருஷ்ணனின் வயது முதிர்ந்த தாயாரை கவனிக்கும் பணியில் அந்த நர்ஸ் ஈடுபட்டு இருந்தார். இதற்காக காலையில் ராதாகிருஷ்ணனின் வீட்டுக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் (8ம்தேதி) காலையிலும் வழக்கம் போல் வந்து அவரது தாயாருக்கு உடல் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் டைனிங் டேபிளில் இருந்தவாறு, டாக்டர் ராதாகிருஷ்ணன் நர்சிடம் டீ தருமாறு கேட்டுள்ளார்.
இதையடுத்து டீ போட்டு கொண்டு சென்று இருக்கிறார். டீயை குடித்து விட்டு அவரது கையை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதை வெளியே கூறக்கூடாது என்று மிரட்டியும் உள்ளாராம். அதிர்ச்சியில் வெளியே ஓடி வந்த நர்ஸ், இதுகுறித்து, உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் உடனடியாக காரில் நாகர்கோவில் வந்து நேசமணி நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் பாதிக்கப்பட்ட நர்ஸ் புகாரின் பேரில், டாக்டர் ராதாகிருஷ்ணன் மீது பி.என்.எஸ். சட்டப்பிரிவு 75 (i), 351 (2) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராதாகிருஷ்ணனை தேடி அவரது வீட்டுக்கு போலீசார் சென்றபோது இல்லாததால், உறவினர்களிடம் விசாரித்து விட்டு வந்தனர். டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த போதும் இது போன்று இளம்பெண்களிடம் எல்லை மீறியதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

