திருவனந்தபுரம்: அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடந்த கோர விமான விபத்தில் 265 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சிதா என்ற நர்சும் பலியானார். இந்நிலையில் இவரை இழிவுபடுத்தும் வகையில் காசர்கோடு மாவட்டம் வெள்ளரிக்குண்டு தாலுகா துணை தாசில்தாரான பவித்ரன் என்பவர் சமூக வலைதளங்களில் சில கருத்துக்களை பகிர்ந்தார். பெண்மையை இழிவுபடுத்தும் வகையிலும், ஆபாசமாகவும் இவர் கருத்துக்களை பகிர்ந்திருந்தார். ரஞ்சிதா லண்டனில் வேலைக்கு செல்வதற்கு முன் பத்தனம்திட்டாவில் ஒரு அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டுத் தான் லண்டனுக்கு இவர் புறப்பட்டார்.
அரசு வேலையை விட்டுவிட்டு சென்றதால் தான் ரஞ்சிதா விபத்தில் சிக்கினார் என்றும் பவித்ரன் விமர்சித்திருந்தார். மேலும் ரஞ்சிதாவுக்கு எதிராக சாதி ரீதியாகவும் இவர் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. துணை தாசில்தார் பவித்ரனுக்கு எதிராக கேரள முதல்வர் அலுவலகத்திலும் புகார்கள் குவிந்தன. இதைத் தொடர்ந்து அவரை துணை தாசில்தார் பதவியிலிருந்து காசர்கோடு மாவட்ட கலெக்டர் இன்பசேகரன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதற்கிடையே போலீசார் பவித்ரனை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறினர். நேற்று மாலை பவித்ரன் காவல் நிலையத்தில் ஆஜரானார். விசாரணைக்கு பின் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.