டெல்லி : செவிலியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம்நாத் அமர்வு விசாரித்தது. அப்போது, ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக நியமிக்க மறுப்பதும் அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்க மறுப்பதும் ஏன் என்று உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியது.
இதற்கு பதில் அளித்த தமிழக அரசின் வழக்கறிஞர், ஒன்றிய அரசிடம் இருந்து உரிய நிதி கிடைக்காததால் ஒப்பந்த செவிலியருக்கான ஊதியம் நிலுவையில் உள்ளது என்ற வாதத்தை முன்வைத்தார். இதற்கு நீதிபதிகள், செவிலியர்களின் உழைப்பை அளவுக்கு அதிகமாக சுரண்டுவதாகவும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தருவது அரசின் கடமை அதை தட்டிக்கழிக்க முடியாது என்றும் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் பிரச்சனை குறித்து 4 வாரத்தில் பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.