தேனி: என் நம்பர் நயினாரிடம் இருக்கு... வேணும்னா போன் பண்ணட்டும்... என்று ஓபிஎஸ் நக்கலாக பதிலளித்து உள்ளார். அதிமுகவிலிருந்து விலக்கப்பட்டு அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை நடத்தி வரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று விட்டு நேற்று பெரியகுளத்திற்கு திரும்பினார். அப்போது வீட்டு முன் திரண்டிருந்த செய்தியாளர்களிடம், ‘சென்றோம், வென்றோம்’ என்று மட்டும் கூறி விட்டு, வீட்டிற்குள் சென்று விட்டார்.
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘அதிமுக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை செங்கோட்டையன் என்னிடம் பேசி உள்ளார். செங்கோட்டையனின் எண்ணம், செயல் வெற்றியடைய வாழ்த்துகிறேன். கடந்த மூன்று வருடங்களாக கட்சி இணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என சொல்லிக் கொண்டு உள்ளேன். கழகம் ஒன்றிணைவதற்கான முழு முயற்சியை செங்கோட்டையன் முன்னெடுத்துள்ளார். அவர் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தது பற்றி தம்பிதுரை தெரிவித்த கருத்து குறித்து நிருபர்கள் கேட்டபோது, ‘‘தம்பிதுரை கருத்துக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை’’ ஓபிஎஸ் பதிலளித்தார். ‘‘நீங்கள் அழைத்தால் சந்திப்பேன் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளாரே’’ என்று கேட்டபோது, ‘‘என் நம்பர் அவரிடம் உள்ளது’’ என்றார்.
துணை ஜனாதிபதி தேர்தலில் உங்கள் ஆதரவு ராஜ்யசபா எம்பி, யாருக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தார் என கேட்டபோது, ‘‘ஏற்கனவே துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டதும் வாழ்த்து தெரிவித்தேன். சி.பி.ராதாகிருஷ்ணன் நல்லவர். அதிமுக ஒருங்கிணைப்பு குழு ராஜ்யசபா உறுப்பினர் தர்மர், துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்துள்ளார்’’ என்றார்.