புதுடெல்லி: என்எஸ்டபிள்யு ஸ்குவாஷ் இறுதிப் போட்டிக்கு, தமிழக வீராங்கனை ராதிகா சுதந்திர சீலன் முன்னேறி அசத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் என்எஸ்டபிள்யு ஸ்குவாஷ் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை ராதிகா சுதந்திர சீலன் (24) பங்கேற்று தொடர் வெற்றிகள் பெற்று வருகிறார். காலிறுதியில் ஆஸி வீராங்கனை கரேன் புளூமை அபாரமாக வென்று அரை இறுதிக்கு முன்னேறிய ராதிகா, நேற்று நடந்த போட்டியில் நியூசிலாந்து வீராங்கனை எம்மா மெர்சனுடன் மோதினார். துவக்கம் முதல் அற்புதமாக ஆடி ஆதிக்கம் செலுத்திய ராதிகா, 11-9, 11-7, 11-6 என்ற நேர் செட் கணக்கில் எம்மாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதையடுத்து, இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் கனடா வீராங்கனை இமான் ஷாஹீனை ராதிகா எதிர்கொள்ள உள்ளார். இதற்கிடையே, செயின்ட் ஜேம்ஸ் எக்ஸ்பிரஷன் ஸ்குவாஷ் ஓபன் ஆடவர் பிரிவு போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் இந்திய வீரர், வீர் சோத்ரானி, எகிப்து வீரர் முகம்மது எல்ஷெர்பினியை காலிறுதிப் போட்டியில் நேற்று அபாரமாக வென்று அரை இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார்.
+
Advertisement

