சென்னை: 2025-26ம் கல்வியாண்டு என்எஸ்எஸ் சிறப்பு முகாம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம் வருமாறு: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நாட்டு நலப்பணித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2025-26ம் கல்வியாண்டுக்கான என்எஸ்எஸ் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, என்எஸ்எஸ் சிறப்பு முகாம் 7 நாட்களுக்கு நடத்தப்பட வேண்டும்.
இந்த முகாமில் பங்கேற்கும் மாணவர்களின் பெற்றோரிடம் இருந்து மறுப்பின்மை சான்றிதழ் பெற்ற பின்னரே சிறப்பு முகாமில் பங்கேற்க செய்யவேண்டும். முகாம் அழைப்பிதழில் இடம்பெறும் பெயர்கள் மற்றும் விவரங்கள் தமிழில்தான் இருக்கவேண்டும். மாணவர்கள் தங்கும் இடங்களில் போதிய வசதிகள் இருப்பதோடு, முறையான அனுமதியின்றி மாணவர்களை முகாமில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது. இதுதவிர மதம் சார்ந்த பரப்புரைகளை மேற்கொள்ள எவருக்கும் அனுமதி அளிக்கக்கூடாது. குறைந்தது 1,000 மரக்கன்றுகள் மற்றும் விதைகள் நட வேண்டும். உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்வு, மண் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, போதைப்பொருள் தடுப்பு சார்ந்த விழிப்புணர்வு உள்ளிட்ட செயல்பாடுகளை சிறப்பு முகாமில் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.