இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் புறப்பாடு மற்றும் வருகையின்போது பயணிகள் எளிதாக செல்லும் வகையில் புதிய பாஸ்ட்-ட்ராக் இமிக்ரேஷன் திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டம், தற்போது, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத், கொச்சி், அகமதாபாத் ஆகிய முக்கிய விமான நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் உள்ள 21 விமான நிலையங்களில் அமல்படுத்தப்பட உள்ளது.
இதன்படி ‘தகுதியான பயணிகள்’, இ-கேட் மூலம் எளிதாகவும், விரைவாகவும் வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இனி, பயணிகள் வழக்கமான நீண்ட வரிசைகளை தவிர்க்கலாம். இந்த திட்டம், சென்னை உள்பட முக்கிய நகரங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், முன் விமானங்களில் வரும் ‘சரிபார்க்கப்பட்ட’ இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்திய குடிமக்கள் (OCI) ஆகியோர் பாஸ்ட்-ட்ராக் இமிக்ரேஷன் சிஸ்டம் மூலம் சில நொடிகளில் விமான நிலையங்களை விட்டு வெளியேறுகிறார்கள்.
இப்புதிய பாஸ்ட்-ட்ராக் இமிக்ரேஷன் திட்டத்தின்கீழ் பதிவு செய்தவர்கள் மட்டுமே எளிதாக இமிக்ரேஷன் சோதனையை செய்து வெளியேற முடியும். இந்த திட்டத்தில் இணையும் பயணிகள், தேவையான சரிபார்ப்புகளுக்கு பிறகு, இ-கேட்கள் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். இதில், தேவையான அனைத்து சரிபார்ப்பு நடைமுறைகளுக்கு பின்னரே, குறிப்பிட்ட பயணிகள் நம்பகமான பயணிகள் என்ற ‘ஒயிட் லிஸ்ட்’-ல் சேர்க்கப்படுவார்கள். இதன்படி இ-கேட்கள் வழியாக செல்லும் ‘நம்பகமான பயணி’களின் பயோமெட்ரிக்ஸ் ஏற்கனவே வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அல்லது விமான நிலையங்களில் சேகரிக்கப்பட்டிருக்கும்.
எனவே, பதிவு செய்யப்பட்ட பயணிகள் இ-கேட்களை அடையும்போது, அவர்கள் தங்கள் விமானத்தின் விவரங்களை பெற விமான நிறுவனங்கள் வழங்கிய போர்டிங் பாஸை ஸ்கேன் செய்வார்கள். பின்னர், கடவுச்சீட்டும் ஸ்கேன் செய்யப்பட்டு, பயணிகளின் பயோமெட்ரிக்ஸ் அங்கீகரிக்கப்படும். அதன்பிறகு பயணியின் அடையாளம் கண்டறியப்பட்டு, பயோமெட்ரிக் அங்கீகாரம் செய்யப்பட்டவுடன், இ-கேட் தானாகவே திறக்கும். இதன்மூலம் விரைவாக பயணிகள் செல்ல முடியும். இத்திட்டத்திற்கு தகுதியான நபர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விவரங்கள் அனைத்தும், இமிக்ரேஷன் அலுவலகத்தால் சரிபார்க்கப்படும். இமிக்ரேஷன் அதிகாரிகளால் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, சர்வதேச விமான நிலையங்கள் அல்லது அருகிலுள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தில் அவர்களின் பயோமெட்ரிக்ஸை வழங்க வேண்டும்.
அதன்பிறகு நீங்கள் நம்பகமான பயணிகள் லிஸ்டில் வந்து விடுவீர்கள். எளிதாக விமான நிலையங்களில் இருந்து ஒரு சில நொடிகளில் வெளியேற முடியும். இந்த எப்டிஐ பதிவு (நம்பகமான பயணி என்பது) அதிகபட்சம் 5 ஆண்டுகள் அல்லது பாஸ்போர்ட் செல்லுபடியாகும் வரை என எது முதலில் வருகிறதோ, அதுவரை செல்லுபடியாகும். விண்ணப்பதாரர்களின் பாஸ்போர்ட் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்காவது செல்லுபடியாகும் நிலையில் இருந்தால் தான் இந்த திட்டம் பொருந்தும். இமிக்ரேஷன் செயல்முறைகளில் மனிதர்களின் தலையீட்டை குறைக்கும் வகையில், இந்த திட்டம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய வேகமான உலகில், இதுபோன்ற வேகமான நடைமுறைகள் எல்லா துறைகளிலும் தொடர வேண்டும்.
 
  
  
  
   
