நவம்பர் மாதத்திற்கான 13.78 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும்: காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
சென்னை : டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 45வது கூட்டம் அதன் தலைவர் ஹல்தார் தலைமையில் நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் அரசு செயலாளர் ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில், தமிழக அரசு சார்பில், தற்பொழுது (5.11.2025) வரை மேட்டூர் அணையின் நீர் இருப்பு 89.741 டி.எம்.சி ஆக உள்ளது. மேலும், கர்நாடக அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து கணிசமான அளவு தொடர்ந்து வருவதினாலும், தமிழகத்திற்கு நவம்பர் மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவான 13.78 டி.எம்.சி. நீரை உச்ச நீதிமன்ற ஆணையின்படி கர்நாடகம் பில்லிகுண்டுலுவில் திறந்து விட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
