Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஒருங்கிணைப்பது அல்ல மம்மி கட்சியை சிதைப்பது தான் டெல்லியின் பிளான் என்கிறார் wiki யானந்தா

‘‘தெரியுமா, தெரியாதா என்ற கேள்வியால் சைபருக்கு ஓட்டம் பிடிக்கிறாங்களாமே இளசுகள்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுப்புது அரசியல் விளையாட்டுகள் அரங்கேறும் தென்மாநில யூனியனில் தேர்தல் ஜுரம் பற்றியுள்ளதாம்.. ஒவ்வொரு கட்சியும் ஆட்களை வளைக்கும் நடவடிக்கையில் நேரடியாக, மறைமுகமாக ஈடுபட்டுள்ளதாம்.. நிலைமை இப்படியிருக்க குறிப்பிட்ட சில தொகுதி வாசிகளின் செல்போனுக்கு அன்னோன் அழைப்பு வருகிறதாம்.. புது நம்பராக இருக்கே என எடுத்தால் உங்களுக்கு ‘டின்’ அதிபரை தெரியுமா, தெரியாதா என்ற கேள்வியை கேட்பதோடு பட்டன் 1ஐ, 2ஐ, 3ஐல் ஒன்றை அழுத்தவும் என ஜாய்ஸ் கொடுக்கப்படுகிறதாம்..

ஏதோ காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வது போன்று செயல்பாடு இருக்கவே, சைபர் கும்பலின் சதிவேலையாக இருக்குமோ என்ற அச்சம் பலரிடம் வந்துள்ளதாம்.. இதனால சைபர் க்ரைமுக்கு உடனே ஓட்டம்பிடித்த இளசுகள் எங்கிருந்து எனது நம்பரை அவர்கள் பெற்றார்கள், தனிப்பட்ட தகவலை எப்படி திருடலாம் என கிடுக்கிப்பிடி போட்டு நடவடிக்கை எடுங்கன்னு மனுவை கொடுத்தார்களாம்.. அதை வாங்கி மேஜையில் வைத்த சைபர் அதிகாரிகளோ வழக்கம்போல தங்களது வேலைகளில் பிஸியாக உள்ளார்களாம்.. அதிபரின் தாரக மந்திரம் என்னவோ என்ற முணுமுணுப்புதான் யூனியனில் இருக்காம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சியை ஒருங்கிணைப்பது ஒரு வேலையே இல்லையாம்... மம்மி கட்சியை சிதைப்பதுதான் மலராத கட்சியின் டெல்லியோட பிளானாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியே எனது உயிர்மூச்சு என்றிருந்த தேனிக்காரரை உள்ளே விடாமல் கதவை சாத்தினாராம் இலைக்கட்சி தலைவர்.. கவலைப்படாதீங்க, நாங்க இருக்கோம், பழகலாம் வாங்கன்னு அணைச்சிக்கிட்ட மலராத கட்சி, அவரை இலையை எதிர்த்து பலாப்பழ சின்னத்துல போட்டிபோட வச்சதோடு, நீங்க மத்திய மந்திரியாவது நிச்சயமுன்னு வாக்குறுதி கொடுத்தாங்களாம்.. இதனால ரொம்பவே சந்தோசம் அடைந்த தேனிக்காரர் தேர்தலில் நின்று தோல்வியையே கண்டாராம்..

அதோடு மலராத கட்சி அவரை கழற்றி விட்டுவிட்டதாம்.. இலைக்கட்சியிலும் எங்களால் சேர்த்துவிட முடியாது என கைவிரித்த காரணத்தினால் போக்கு இடம் தெரியாமல் தவிச்சியிருக்காரு.. அதே நேரத்துல நடிகர் தொடங்கிய கட்சியில் இளைஞர்கள் துள்ளல் அதிகமாக இருப்பதால் அங்குபோய் ஒட்டிக்கிடலாமுன்னு இருந்திருக்காரு.. இவரோடு குக்கர்காரரும் ரெடியாகியிருக்காரு.. இவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் கோபி கோட்டைக்காரரும் தயாராகியிருக்காரு.. அதோடு தேனிக்காரரின் மா.செ.க்கள் கூட்டத்தில், நம்மை உதாசீனப்படுத்திய மலராத கட்சியோடு சேரவே கூடாதுன்னு கடிதம் கொடுத்திருக்காங்க..

மலராத கட்சியும் தனக்கு போதிய அடைக்கலம் கொடுக்கல.. இலைக்கட்சியிலும் சேரமுடியாது... வாழ்வுக்கு ஒரே இடம் நடிகருடன் சேர்ந்து இலைக்கட்சி தலைவரை அனாதையாக்குவது தான் ஒரே முடிவு என திட்டமிட்டிருக்காரு.. இதனை எப்படியோ தெரிஞ்சிக்கிட்ட டெல்லி உள்துறையானவர், தேனிக்காரரை தலைநகருக்கு அழைச்சிருக்காரு.. தனியாக ஒரு கட்சியை தொடங்குங்க.. குறைந்தது 5 சீட் வரை வாங்கித் தாறோமுன்னு உறுதி சொன்னாராம்.. அதோடு சின்னமம்மியையும் பிரசாரம் செய்ய வச்சிடலாமுன்னு சொல்லியிருப்பதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. ஆனால் இந்த டெல்லியோட பிளானே கொஞ்சம் கொஞ்சமா இலைக்கட்சியை சிதைப்பது தானாம்..

உண்மையிலேயே டெல்லிக்கு இந்த இலைக்கட்சியை ஒருங்கிணைக்க ஒருநிமிடம் போதுமாம்.. ஆனால் அந்த வேலையை செய்ய விரும்பலையாம்.. அவர்களின் திட்டமே மம்மியோட கட்சி இந்த உலகத்தில் இருக்கவே கூடாது என்பது தானாம்.. இதற்கிடையில் இத்தனை நாளாக வீம்பு காட்டிக்கிட்டிருந்த இலைக்கட்சி தலைவரோ கூட்டணியில யாரும் இல்லாததால் சம்மதம் தெரிவிச்சதாகவும் அடிப்பொடிகள் சொல்றாங்க.. அதோடு தேனிக்காரர் தொடங்கும் கட்சிக்கு அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமுன்னு இருக்க கூடாதுன்னும் இலைக்கட்சி தலைவர் கண்டிசன் போட்டிருக்காராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தேனிக்காரரின் பேச்சை எடுத்தாலே மலராத தேசிய கட்சியின் மாநில தலைவரான அல்வா ஊரின் எம்எல்ஏ, தப்பி ஓட்டம் பிடித்து விடுகிறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.‘‘ஏற்கனவே இலை கட்சியில் இருந்தபோது அல்வா ஊரின் எம்எல்ஏக்கும், தேனிக்காரருக்கும் 7ம் பொருத்தமாம்.. இதனால் தான் அல்வா ஊரின் எம்எல்ஏ மலராத தேசிய கட்சிக்கு தாவினார் என இலை கட்சியினர் பேசி வர்றாங்க.. தமிழ்நாட்டில் இன்னும் 4 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரும் நிலையில் இலை கட்சியும், மலராத தேசிய கட்சியும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் ஒட்டிக் கொண்டன. ஆயினும் அவர்களது கூட்டணி இலை மறை காய் போலத் தான் உள்ளது. ஏனெனில் இலை கட்சியில் உள்ள பலரும் மலராத தேசிய கட்சியுடன் கூட்டணியை விரும்பவில்லை.

ஏற்கனவே தேனிக்காரர், குக்கர்காரர், சின்ன மம்மி ஆகியோரை இலை கட்சியில் இருந்து நீக்கி விட்ட நிலையில், தேசிய கட்சியுடன் கூட்டணி காரணமாக மாஜி அமைச்சர், மாஜி எம்எல்ஏ என ஒவ்வொரு தலைவர்களாக கழன்று வர்றாங்க.. இந்நிலையில் தேனிக்காரர் மலராத தேசிய கட்சியின் நம்பர் 2 ஆனவரின் அவசர அழைப்பை ஏற்று தலைநகருக்கு போனார். இதனால் இலை கட்சியில் தேனிக்காரரை ஒட்ட வைக்க முயற்சி நடந்ததாக பேசப்பட்டது.

இதுகுறித்து நெல்லையில் பத்திரிகையாளர்களை சந்தித்த தேசிய கட்சியின் மாநில தலைவரான அல்வா ஊரின் எம்எல்ஏவிடம் கேள்வி எழுப்பியிருக்காங்க.. அதற்கு, தேனிக்காரர் நம்பர் 2 ஆனவரை சந்தித்தது தனக்கு தெரியாது. அந்த சந்திப்பின்போது நான் அங்கு இல்லை. அவரது சந்திப்பை பச்சை கண்ணாடி போட்டுத்தான் பார்க்க வேண்டும் என கழுவும் மீனில் நழுவும் மீன் போல நழுவி விட்டாராம்.. ஏற்கனவே பிரதமர் திருச்சி வருகையின் போது அவரை தேனிக்காரர் சந்திப்பதை தவிர்த்து விட்டார் என பரஸ்பரம் புகார் எழுந்த நிலையில், தற்போது ஊரே அறிந்த விவகாரத்தை பச்சை கண்ணாடி போட்டுத் தான் பார்க்க வேண்டும் என அல்வா ஊரின் எம்எல்ஏ கூறியிருப்பது அதை உறுதிப்படுத்தி இருக்கு..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.