Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

50% வரிவிதிப்பு விசயத்தில் பிரச்னைகள் தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது: மோடிக்கு டிரம்ப் பதிலடி: இருநாடுகளுக்கும் இடையே முற்றியது வர்த்தகப் போர்

வாஷிங்டன்: அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, இந்தியப் பொருட்கள் மீது நேற்று முதல் 25% வரியை அமெரிக்கா அமல்படுத்தியது. இந்திய இறக்குமதிகள், நேரடியாகவோ அல்லது இடைத்தரகர்கள் மூலமாகவோ மேற்கொள்ளப்பட்டாலும், அவை அமெரிக்காவின் வழக்கத்திற்கு மாறான மற்றும் அசாதாரணமான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், அவசரகாலப் பொருளாதார நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்வதைக் காரணமாகக் காட்டி, தற்போது மேலும் 25 சதவீத வரியை உயர்த்தி, மொத்த வரியை 50 சதவீதமாக அதிகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் நிர்வாக உத்தரவு மூலம் அறிவித்துள்ளது. இந்த கூடுதல் வரி, அடுத்த 21 நாட்களில், அதாவது ஆக. 27ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும், அமெரிக்கத் துறைமுகங்களுக்குள் நுழையும் அனைத்து இந்தியப் பொருட்களுக்கும் இந்த புதிய வரி பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினை தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை கிடையாது’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை நியாயமற்றது, ஏற்றுக்கொள்ள முடியாதது என வன்மையாகக் கண்டித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், நாட்டின் நலனைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது. இதற்காக நாங்கள் ஒரு பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை நான் அறிவேன், அதற்கு நான் தயாராக இருக்கிறேன். இந்தியாவும் தயாராக இருக்கிறது’ என்று டிரம்பின் சவாலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசினார்.

ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கும் சீனா, துருக்கி போன்ற நாடுகள் மீது இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமல், இந்தியா மீது மட்டும் அமெரிக்கா பாரபட்சம் காட்டுவதாகவும் இந்திய தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சீனா மீது 145% வரி விதிக்கப்பட்டிருந்தாலும், அது பேச்சுவார்த்தைக்காகத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கோடிக்கணக்கான கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, வேளாண்மை மற்றும் பால்வளம் போன்ற முக்கியத் துறைகளை சர்வதேசப் போட்டிக்குத் திறந்துவிடுவதை இந்தியா தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

தேசிய நலன் மற்றும் பொருளாதாரக் கொள்கை சார்ந்த விஷயங்களில் இரு நாடுகளும் தத்தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், இந்த வர்த்தக மோதல் இருதரப்பு உறவில் ஒரு கடுமையான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தகத்தில் முதல் கட்டப் பனிப்போர் தொடங்கி உள்ள நிலையில், தற்போது ‘இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்னை தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை கிடையாது’ என்று டிரம்ப் கூறியுள்ளது, இரு நாடுகளுக்கும் இடையே கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முற்றிய வர்த்தகப் போராக மாறியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.