Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நாகேந்திரனின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்த பிரபல ரவுடி வெள்ளை பிரகாஷ் துப்பாக்கி முனையில் கைது

பெரம்பூர்: பிரபல ரவுடி நாகேந்திரன் இறுதி ஊர்வலம் நேற்று நடந்தது. இதில், அவரது ஆதரவாளர்கள் மற்றும் பிரபல ரவுடிகள் கலந்து கொள்வார்கள் என்று உளவுத்துறை எச்சரித்திருந்த நிலையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நாகேந்திரனின் வலதுகரமாக இருந்தவரும், அவர் சொல்லும் கொலைகளை உடனடியாக செய்து முடித்தவருமான பிரகாஷ் (எ) வெள்ளை பிரகாஷ் என்பவர் விழுப்புரம் பகுதியில் தங்கி, பல்வேறு திரைமறைவு வேலைகளை செய்து வந்தார். இவர் மீது கிறிஷ்டா கொலை வழக்கு, கூட்ஸ் ஷெட் பகுதியில் பாளையம் என்பவரை கொலை செய்த வழக்கு, பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளர் தென்னரசு கொலை செய்த வழக்கு உள்ளிட்ட 3 கொலை வழக்குகள் உள்பட 40க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவர், நாகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரப்போவதாக கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து கொடுங்கையூர் பார்வதி நகர் பகுதியில் பதுங்கியிருந்த வெள்ளை பிரகாஷை (44) சுற்றிவளைத்து, துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவரிடம் இருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், நாகேந்திரனின் இறுதி சடங்கிற்கு வரும் ரவுடிகளுக்கு கொடுப்பதற்காக கஞ்சா கொண்டு வந்ததாகவும், தனது குருநாதருக்கு அஞ்சலி செலுத்த வந்தேன்’ என்றும் வெள்ளை பிரகாஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து வெள்ளை பிரகாஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த 2022ம் ஆண்டு கொடுங்கையூர் குப்பைமேடு பகுதியில் காரில் வந்த வெள்ளை பிரகாஷிடம் இருந்து 40 நாட்டு வெடிகுண்டுகள், 40 அரிவாள்கள், 4 கத்திகள் மற்றும் ஒரு துப்பாக்கி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பித்தபோது வெள்ளை பிரகாசுக்கு கால் உடைந்தது. அந்த வழக்கில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்த பிரகாஷ் 2 முறை சிறைக்கு சென்று தொடர்ந்து தலைமறைவாக இருந்துள்ளார். தற்போது குருநாதருக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது போலீசார் கைது செய்துள்ளனர்.