Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பிரபல பெண் ரவுடியும், பாஜக முன்னாள் நிர்வாகியுமான அஞ்சலைக்கு, 2 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு!

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே உள்ள பிரபல பெண் ரவுடியும், பாஜக முன்னாள் நிர்வாகியுமான அஞ்சலைக்கு, வேறொரு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் முன்விரோதம் காரணமாக கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி அவரது வீட்டின் அருகே, கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளை பிடிக்க கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.சென்னை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சந்தீப்ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றப்பட்டு அவருக்கு பதில் கூடுதல் டிஜிபி அருணை சென்னை போலீஸ் கமிஷனராக தமிழக அரசு நியமனம் செய்தது.

அதன் பின்னர் இந்த வழக்கில் நடத்திய அதிரடி விசாரணையில் பட்டினப்பாக்கம் கடற்கரையில் ரவுடி ஆற்காடு சுரேஷ் படுகொலைக்கு பழி தீர்க்கும் வகையில் அவரது சகோதரர் பொன்னை பாலு, கூலிப்படையை ஏவி ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து கூலிப்படை தலைவனாக செயல்பட்ட ரவுடி திருவேங்கடம், ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், சந்தோஷ் உள்பட 11 பேரை தனிப்படையினர் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை கைப்பற்ற ரவுடி திருவேங்கடத்தை கடந்த ஜூலை 14ம் தேதி மணலியில் உள்ள வீட்டிற்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது, போலீசாரை தாக்கிவிட்டு தப்பியபோது என்கவுன்டர் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி, தனிப்படையினர் காங்கிரஸ் முன்னாள் மாநில நிர்வாகி அஸ்வத்தாமன், வடசென்னை பாஜ மகளிரணி துணை செயலாளர் அஞ்சலை, கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், அதிமுக திருவல்லிக்கேணி மேற்கு பகுதி துணை செயலாளர் மலர்க்கொடி, வடசென்னை பிரபல ரவுடியும் ஆயுள் தண்டனை கைதியுமான நாகேந்திரன் என 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரத்தில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 5 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டு, அதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே உள்ள பிரபல பெண் ரவுடியும், பாஜக முன்னாள் நிர்வாகியுமான அஞ்சலைக்கு, வேறொரு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரியல் எஸ்டேட் தரகரிடம் கந்துவட்டி வசூல், கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.13,000 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை நீதிமன்றத்தில் செலுத்திய நிலையில், 2 ஆண்டுகள் தண்டனை என்பதால் மேல்முறையீடு செய்ய உள்ளதாகக் கூறி, நீதிமன்ற பிணைக்கு மனுத்தாக்கல் செய்துள்ளார்.