திருமலை: திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிந்து கொண்டு, விதிமுறைகளை மீறிய 3 ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருபவர் கே.ராமு. இவர் தேவஸ்தான பணியில் இருந்து கொண்டு அரசியல் பிரமுகர்களுடன் வணிகம் செய்து பெரும் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
அதேபோல் தேவஸ்தானத்தில் அலுவலக துணை அதிகாரியாக உள்ள என்.சங்கரா, தனது குடியிருப்புகளை தனியாருக்கு வழங்கி பெரும் வங்கி பரிவர்த்தனைகளை செய்துள்ளார். அதேபோல் பணி நேரத்தில் அரசியல் பிரமுகர்களுக்கு, ஜூனியர் உதவியாளர் சீரலாகிரண் என்பவர் சேவை செய்து வந்துள்ளார். இந்த 3 ஊழியர்களும் தேவஸ்தான விதிகளை மீறியதால், அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. தேவஸ்தானத்தில் பணி புரியும் ஊழியர்கள் நடத்தை விதிகளை மீறி, தேவஸ்தான நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.