கூட்டணி பற்றி கவலையில்லை ஆட்சியில் பங்கு தர நான் ஏமாளி அல்ல: அமித்ஷாவுக்கு எடப்பாடி பகிரங்க எச்சரிக்கை
திருத்துறைப்பூண்டி: ‘கூட்டணி பற்றி கவலை இல்லை. ஆட்சியில் பங்கு கொடுக்க நான் ஏமாளி அல்ல’ என திருத்துறைப்பூண்டியில் நடந்த பிரசார கூட்டத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். இது, அமித்ஷாவுக்கு விடுத்த பகிரங்க எச்சரிக்கை என்பதால் பாஜ தலைவர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், பாஜவுடன் நெருக்கம் காட்டினார். இதனால் அவரை முதல்வர் பதவியில் இருந்து தூக்கி விட்டு, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக நியமித்தார் சசிகலா. பின்னர் அவர் சிறை சென்றார். அப்போது பாஜவுடன் எடப்பாடி பழனிசாமியும் நெருக்கம் காட்டினார். பின்னர் கூட்டணி சேர்ந்தார். சட்டப்பேரவை தேர்தலில் இந்த கூட்டணி படுதோல்வியை சந்தித்து, ஆட்சியை இழந்தது. இந்த தோல்விக்கு பாஜவினர்தான் காரணம் என்று அதிமுகவினர் குற்றம்சாட்டினர்.
இதனால், மக்களவை தேர்தல் நேரத்தில் பாஜ கூட்டணியை விட்டு அதிமுக வெளியேறி தனி அணி அமைத்து போட்டியிட்டது. பாஜவும் 21 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இந்த தேர்தலில் இரு அணிகளுமே படுதோல்வியை தழுவின. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணியில் அதிமுக கண்டிப்பாக சேர்ந்தே ஆக வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எடப்பாடியை டெல்லிக்கு அழைத்து பல்வேறு வழக்குகளை வைத்து நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் சோதனைகளை நடத்தின. அதில் பல நூறு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், வேறு வழியே இல்லாமல் பாஜ கூட்டணியில் சேர எடப்பாடி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், சென்னையில் நீண்ட இழுபறிக்குப் பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், எடப்பாடி பழனிசாமியை வைத்துக் கொண்டு அதிமுக - பாஜ கூட்டணியை அமித்ஷா அறிவித்தார். அப்போது முதல் தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும் என்று அமித்ஷா திட்டவட்டமாக கூறி வருகிறார். தொடர்ந்து, இதுபோல் 4 முறை அவர் இவ்வாறு அறிவித்து உள்ளார். அமித்ஷாவின் கருத்துதான் எங்களுக்கு வேத வாக்கு என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகனும் கூறிவிட்டார். ஆனால், எடப்பாடியோ, அதிமுக கூட்டணி வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்து வந்தார். அமித்ஷாவின் பேச்சை தொடர்ந்து பாமக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளும் கூட்டணி அமைச்சரவை வேண்டும் என்று கேட்க தொடங்கின. இது எடப்பாடி பழனிசாமிக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனிடையே கூட்டணி அமைச்சரவை தான் என்று வலியுறுத்திய பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை, இதில் எடப்பாடிக்கு கருத்து வேறுபாடு இருந்தால், அவர் அமித்ஷாவிடம் பேச வேண்டும் என்று கூறினார். இதுவும் எடப்பாடிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என்று அமித்ஷாவுக்கு எடப்பாடி பழனிசாமி பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது பாஜ தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த அவர் இறுதியாக நேற்று முன்தினம் இரவு திருத்துறைப்பூண்டியில் பேசியதாவது:
எனது சம்மந்தி வீட்டில் ரெய்டு நடந்ததால் தான் பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளேன் என்று அமைச்சர் நேரு கூறியுள்ளார். எனது சம்மந்தி வீட்டில் ரெய்டு நடக்கவில்லை. உறவினர் வீட்டில் ரெய்டு நடந்ததற்கும், எனக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. கட்சி நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் ஆதரவோடு நான் முதல்வரானேன். நான்கரை ஆண்டுகள் மக்களின் வளர்ச்சியை நினைத்து ஒவ்வொரு நாளும் ஆட்சி செய்தேன். பாஜவுடன் கூட்டணி வைத்ததை விமர்சனம் செய்கின்றனர். கூட்டணி வைத்தால் என்ன தவறு. பாஜவுடன் அதிமுக கூட்டணி வைத்ததுமே திமுகவும், கூட்டணி கட்சிகளும் அச்சமடைந்து விட்டன. 2026 சட்டப்பேரவை தேர்தலில் எங்களது கூட்டணி வெற்றி பெறும்.
அதிமுக தலைமையில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சி அமையும். இன்னும் சில கட்சிகள் இந்த கூட்டணியில் வந்து இணையவுள்ளன.ஆட்சியில் பங்கு கொடுக்க நான் ஒன்றும் ஏமாளி அல்ல. அதிமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருமான்மையாக ஆட்சி அமைக்கும். எங்களுக்கு கூட்டணி வேணும்னா வேணும். வேண்டாம்னா வேண்டாம். அதைப்பத்தி கவலை இல்லை. எங்களைப் போன்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைய வேண்டும். அதுதான் என் நிலைப்பாடு. ஸ்டாலின் 200 சீட்டில் ஜெயிப்பதாக சொல்கிறார். நிஜத்தில் 210 தொகுதிகளை அதிமுக கூட்டணி தான் ஜெயிக்கும். பாஜ தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைக்குது என சொல்கிறார்.
அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தல் சட்டமன்றத்துக்கா, நாடாளுமன்றத்துக்கா. கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும். அதிமுக தான் ஆட்சிக்கு வரும். அப்புறம் ஏன் அவர்களை பற்றி பேசுகிறீர்கள். எங்களை பற்றி பேசுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் போது ஆட்சியில் அதிமுகவுடன் பாஜ அங்கம் வகிக்கும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து கூறி வரும் நிலையில் திருத்துறைப்பூண்டியில், ஆட்சியில் பங்கு கொடுக்க முடியாது. பங்கு கொடுக்க நான் ஏமாளி அல்ல என எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது அமித்ஷா உள்ளிட்ட பாஜ தலைவர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
‘வருங்கால துணை முதல்வர் நயினார்’ பாஜ பெண் நிர்வாகி கோஷம்
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா 27ம் தேதி நடக்கிறது. இவ்விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதனை முன்னிட்டு பாஜ சார்பில் அங்குள்ள மஹாலட்சுமி திருமண மண்டபத்தில் 10 மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் முன்னிலை நடந்தது. கூட்டத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். இதில் மாவட்ட தலைவர் பரமேஸ்வரி ஆனந்த்ராஜ் வரவேற்று பேசும்போது, `வருங்கால துணை முதல்வர் அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்களே...’ என்று கூறினார். கூட்டத்தில் பலத்த கைதட்டல் எழுந்ததும், இதைக்கேட்டு நயினார் நாகேந்திரன் பதறிப்போய், `அப்படியெல்லாம் சொல்லகூடாது’, என்று பரமேஸ்வரியை கண்டித்தார்.
எடப்பாடி பேசியது ஏன்? நயினார் விளக்கம்
நாகூர் அருகே வாஞ்சூர் ரவுண்டானாவில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தை பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார். பின்னர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி:
பாஜவிற்கு அமைச்சரவையில் இடமளிக்க அதிமுக ஏமாளிகள் இல்லை. அமைச்சரவையில் பாஜவிற்கு இடமில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். இதற்கு காரணம், அதிமுகவை பாஜவிடம் அடகு வைத்து விட்டனர். இதனால் பாஜ அதிமுகவை கபளீகரம் செய்துவிடும் என திமுகவினர் கூறி வருகின்றனர். அதற்காகத்தான் எடப்பாடி பழனிசாமி அவ்வாறு பேசினார். மற்றபடி எடப்பாடியிடம் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. அவர், தமிழகத்தில் செய்து வரும் பிரசாரங்களில் பாஜவினர் கலந்துகொண்டு வருகின்றனர். வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில பாஜ எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்பது குறித்து ஊடகங்கள் கவலைப்பட வேண்டாம். அதேபோல் எத்தனை சீட்கள் பாஜவிற்கு கிடைக்கும் என்பது குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேசி இட ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
எடப்பாடியை சந்திப்பதை தவிர்த்தார் நயினார்
திருத்துறைப்பூண்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த பிரசார கூட்டத்தை முடித்து விட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருவாரூர் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் ஓய்வெடுத்தார்.
இந்நிலையில் கங்கைகொண்ட சோழபுரத்தில் 27ம் தேதி பிரதமர் மோடி கலந்து கொள்ளும் விழாவிற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டுவிட்டு, நாகையில் நடந்த போராட்டம் ஒன்றில் கலந்து கொள்ள பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், திருவாரூரில் எடப்பாடி தங்கி இருந்த ஓட்டல் அமைந்துள்ள பைபாஸ் சாலை வழியாக சென்றார். அப்போது நயினார் நாகேந்திரன், எடப்பாடியை சந்தித்து பேசி விட்டு செல்வார் என்று இரண்டு கட்சி தொண்டர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், நயினார் நாகேந்திரன் கார் ஓட்டலுக்கு செல்லாமல், நேராக சென்று விட்டது. இதனால் இரு கட்சி தொண்டர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
போராட்டத்திற்கு நேரமாகி விட்டதால் திரும்பி வரும் போது சந்திப்பார் என 2 கட்சிகளை சேர்ந்த பொறுப்பாளர்களும் கூறி சமாளித்தனர். ஆனால் நாகை போராட்டம், திருத்துறைப்பூண்டியில் கட்சி பிரமுகர் இல்ல விழா ஆகியவற்றில் கலந்துகொண்ட நயினார் நாகேந்திரன், திருவாரூர் வழியாக செல்லாமல், கிழக்கு கடற்கரை சாலை திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், தொண்டி வழியாக மதுரை சென்றார். திருவாரூர் வழியாக சென்றால், எடப்பாடியை சந்திக்க நேரிடும். இதனால் சந்திப்பை தவிர்ப்பதற்காக மாற்று வழியில் மதுரைக்கு சென்றதாக கூறப்படுகிறது. திருத்துறைப்பூண்டியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பாஜவிற்கு ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என்று பேசியதுதான், நயினார் நாகேந்திரன் சந்திக்காமல் சென்றதற்கு காரணம் என்று பாஜ தொண்டர்கள் தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமியின் திடீர் ஆவேசம், இரண்டு சந்தர்ப்பங்கள் கிடைத்தும் சந்திப்பை தவிர்த்த நயினார் நாகேந்திரன் என இரு கட்சி தலைவர்களின் அதிர வைக்கும் செயல்களால் இரு கட்சி தொண்டர்களும் இரட்டை இலையில், தாமரை மலருமா, மலராதா என்று குழம்பி தவித்து வருகின்றனர்.
பாஜ கூட்டணியில் இருந்து வெளியேற எடப்பாடி திட்டம்?
பாஜவுடன் கூட்டணி சேர்ந்ததற்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் பாஜ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று மீண்டும் மீண்டும் பேசி வருவது அதிமுகவினரிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் உறுதியாக பதில் அளிக்கவில்லை என்ற எண்ணமும் அதிமுக நிர்வாகிகளிடம் உருவானது. இந்நிலையில், கூட்டணியில் அதிமுகவை சேர்ந்தவர் முதல்வராவார் என்று எடப்பாடி பழனிசாமி பெயரை அமித்ஷா தவிர்த்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து எடப்பாடி அதிமுக கூட்டணிக்கு பிரமாண்ட கட்சி ஒன்று வர இருக்கிறது என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இது தொடர்பாக விஜய்யின் தவெகவுடன் அவர் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியானது. அதேசமயம் விஜய்யும் பாஜ இருக்கும் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தார். இதையடுத்தே, திருத்துறைப்பூண்டியில் பேசிய எடப்பாடி பழனிசாமி கூட்டணி பற்றி எங்களுக்கு கவலை இல்லை, ஆட்சியில் பங்கு கொடுக்க நான் ஏமாளியல்ல என்று வெளிப்படையாக பேசியுள்ளார். இதிலிருந்து கூட்டணியில் இருந்து பாஜவை கழற்றிவிட்டு விஜய்யின் தவெகவை இணைக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளார் என்று அதிமுக வட்டாரத்தில் உறுதியாக கூறப்படுகிறது.