Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வடமாநிலங்களில் ஏஜென்டுகள் மூலம் சிலர் தேர்வு எழுதி உள்ளனர் நீட் தேர்வில் ஒரே மாணவருக்கு 3 மாநிலங்களில் ஆள்மாறாட்டம்: சிபிசிஐடி கேட்ட விவரங்களை ஏன் தரவில்லை? தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உத்தரவு

மதுரை: நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கை கிடப்பில் போட்டு, சிபிசிஐடி கேட்ட விவரங்களை தராதது ஏன் என்பது குறித்து, தேசிய தேர்வு முகமை அறிக்கை அளிக்கும்படி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ல் நடைபெற்ற நீட் மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த சென்னை மாணவரை, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்தபோது பெரும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

2019ல் நடைபெற்ற நீட் தேர்வில் பலர் உத்தரப்பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியுள்ளனர். இதுகுறித்து சிபிசிஐடி விசாரணை நடக்கிறது. சிபிசிஐடி விசாரணையில் நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக சென்னை மாணவர், அவரது டாக்டர் தந்தை உள்ளிட்ட மாணவ, மாணவிகள் பெற்றோர், புரோக்கராக செயல்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த ரகுவரன், மணி சக்தி குமார் சிம்ஹா உள்ளிட்ட 27 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 120(B),419,420 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அனைவரும் தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளனர்.

கடந்த 2019ல் நீட் முறைகேட்டில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த ஒருவர், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நீட் தேர்வை எழுதி உள்ளனர். ஆனால் இவர்களது முகவரியில் வெளி மாநிலங்களான டெல்லி, ராஜஸ்தான், கொல்கத்தா, உபி போன்ற மாநிலங்களில் ஆள்மாறாட்டம் செய்து ஏஜென்டுகள் மூலம் சிலர் மாணவர்களுக்காக தேர்வு எழுதி உள்ளது தெரியவந்துள்ளது.

இதில் ஒரு மாணவருக்கு ஒரே நாளில் ஜார்கண்ட், உபி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் ஆள் மாறாட்டம் செய்து மூன்று தேர்வு எழுதி உள்ளனர். மாணவர்களுக்கு போலியாக ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய நபர்கள் குறித்த விவரங்களை தேசிய தேர்வு முகமையிடம் கேட்டுள்ளோம். ஆனால், இதுவரை தேசிய தேர்வு முகமை எந்த விவரங்களையும் தரவில்லை என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி, கடந்த 2019ம் ஆண்டு நீட் தேர்வில் முறைகேடு செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு என்பது சாதாரண குற்றம் அல்ல. விசாரணை அமைப்பினர் தேவையான தகவல்களை கேட்டும் தேசிய தேர்வு முகமை இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, இந்த வழக்கில் நீதிமன்றம் தாமாக முன்வந்து தேசிய தேர்வு முகமையை எதிர் மனுதாரராக சேர்க்கிறது. தேசிய தேர்வு முகமை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனார்.