Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வட மாநிலங்களைப் போல தமிழக காங்கிரஸ் கட்சியில் பாஜ சிலீப்பர் செல்களா? ராகுலிடம் புகார் செய்ய மூத்த தலைவர்கள் திட்டம்

சென்னை: தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பாஜ காலூன்ற முயன்று வருகிறது. ஆனால் அவர்களால் முடியவில்லை. அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த பிறகுதான் 4 எம்எல்ஏ சீட் பெற முடிந்தது. கடந்த மக்களவை தேர்தலில் பல்வேறு கட்சிகளின் கூட்டணி சேர்ந்தாலும் 20 தொகுதிக்கு மேல் டெபாசிட் இழந்தனர். இதனால் தமிழகத்தில் காலூன்ற பாஜவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் பல முயற்சிகளை கையாண்டும் முடியவில்லை. ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அவர்கள் ஆட்சியை தனித்தோ, கூட்டணியாகவோ பிடித்து விட்டனர். தமிழகம் மற்றும் கேரளாவில் மட்டும் அவர்களால் முடியவில்லை.

சில மாதங்களுக்கு முன்னர் மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கூட, தமிழகத்தில் எந்தக் காலத்திலும் பாஜவில் காலூன்ற முடியாது என்று சவால் விட்டார். இதனால் தமிழகத்தில் அவர்களால் எல்லா முயற்சியும் வீணாகிவிடுகிறது. எனவே மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்களை வலைத்துள்ளதுபோல, தமிழகத்திலும் செயல்படுத்த பாஜ, ஆர்எஸ்எஸ் களம் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் காங்கிரஸ் தலைவர்களை வளைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் மூலம் திமுக, காங்கிரஸ் கூட்டணியை பலவீனப்படுத்தும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை வட மாநிலங்களில்தான் காங்கிரஸ் தலைவர்கள் பாஜவுக்கு தாவி வந்தனர். சில மாதங்களுக்கு முன்னர் விஜயதரணி, எம்எல்ஏவாக இருக்கும்போது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜவில் சேர்ந்தார். அதேபோல தற்போது கட்சிக்குள் இருந்தபடியே சில தலைவர்கள் கட்சிக்கு எதிராகவும், கூட்டணிக்கு எதிராகவும் பேசி குழப்பத்தை ஏற்படுத்த சில சிலீப்பர் செல்களை பாஜ, ஆர்எஸ்எஸ் உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் மேலிட பார்வையாளர் ஒருவர், கூட்டணி ஆட்சியை காங்கிரஸ் கேட்கும் என்றார்.

அதே கருத்தை தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் வலியுறுத்தினார். சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவரான ராஜேஷ்குமாரும், கூட்டணி அமைச்சரவை மற்றும் 117 தொகுதிகளை கேட்போம் என்று பேட்டி அளித்துள்ளார். தற்போது, அதே கருத்தை பெரம்பலூர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆர்.வி.ஜெ.சுரேஷ் தெரிவித்துள்ளார். அனைத்து தொகுதியிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இது திட்டமிட்டு தேர்தல் நேரத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற சதிதான் என்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள்.

மேலும், வேண்டும் என்றே சில காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருவதாக மூத்த தலைவர்களே தற்போது குற்றம்சாட்டி வருகின்றனர். கருத்து தெரிவிப்பவர்களின் நோக்கம் காங்கிரஸ் வளர வேண்டும் என்பது கிடையாது. கடந்த 3 தேர்தல்களாக திமுக கூட்டணியில் இருந்து தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் திமுக கூட்டணியில் இருப்பதால் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறது.

இதை தெரிந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, எப்போது தமிழகம் வந்தாலும், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இருவருமே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, தேசிய பிரச்னைகளை கையாண்டு வருகின்றனர். ஆனால் திமுக- காங்கிரஸ் கூட்டணியை உடைக்கும் நோக்கில் சில காங்கிரஸ் தலைவர்கள் செயல்படுவது வேதனை அளிப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டால் காங்கிரசின் நிலை என்ன ஆகும்.

எவ்வளவு ஓட்டு வாங்க முடியும்? தற்போதைய காங்கிரசின் நிலை என்ன என்பது கூட தெரியாமல் அவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள நிலையை நினைத்து பேசுவதாகவும் அந்த தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். கூட்டணிக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் தலைவர்கள் மீது ராகுல்காந்தியிடம் புகார் செய்ய தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். சில தலைவர்கள் பாஜ, ஆர்எஸ்எஸ் அமைப்பின் சிலீப்பர் செல்களாக செயல்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், இதுபோன்று சில தலைவர்கள் பேசி வருவது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.