Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வடமாநிலங்களை புரட்டிப்போட்ட கனமழை, நிலச்சரிவுகள்: தமிழ்நாட்டுக்கும் மேகவெடிப்பு அபாயமா? வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் ஏற்பட்ட மேக வெடிப்பு, அந்த மாநிலங்களை புரட்டிப் போட்டு விட்டது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் கடந்த 5ம் தேதி மேக வெடிப்பால் பெருமழை கொட்டியது. ஹர்ஷில் பகுதியில் உள்ள கீர் கங்கா கடேராவின் நீர் மட்டம் திடீரென உயர்ந்து, அங்குள்ள தாராலி கிராமத்தை வெள்ளத்தில் மூழ்கடித்தது. இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு மேக வெடிப்பு ஏற்பட்டது. இரண்டு பெரிய நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன. மணாலி முழுவதும் துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் சாலைகள் அடித்துச்செல்லப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளிலும் கடந்த சில தினங்களாகவே தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகளில் அபாய அளவை தாண்டி வெள்ள நீர் கரை புரண்டு ஓடுகிறது. நேற்று முன்தினம் காலை அங்கு மேகவெடிப்பு ஏற்பட்டது. 9 மணி நேரத்தில் 25 செ.மீ அதி கனமழை பதிவானது. மேகவெடிப்பு காரணமாக ஜம்மு ஸ்ரீநகர் மற்றும் கிஷ்த்வார்-தோடா தேசிய நெடுஞ்சாலைகள் நிலச்சரிவு, வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. இது மக்களை மிகவும் பதைப்பதைப்புக்கு ஆளாக்கியுள்ளது. மழை வந்தால் உற்சாகம் அடைய வேண்டிய மக்கள், உயிருக்கு உலை வைத்ததுபோல் பதறுவதைக் காண முடிகிறது.

அதிலும், தமிழ்நாட்டில் பருவமழை தொடங்க உள்ள நிலையில், இந்த மேகவெடிப்பு தமிழ்நாட்டிலும் ஏற்படுமா என்ற கேள்விகளை முன்வைத்துள்ளது. தென்மேற்கு பருவமழை காலம் இன்னும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் 20ம் தேதி வரை நீடிக்கும் என்ற நிலையில், அடுத்து வருகின்ற வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பெரும் மழையை கொண்டு வரப் போவதாக நீண்ட கால வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. அதன்படி தமிழகத்தில் அக்டோபர் 20ம் தேதி வழக்கமாக தொடங்க வேண்டிய வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி செந்தாமரைக் கண்ணன் கூறியதாவது:

* வட மாநிலங்களில் அதிக மழை பெய்ய என்ன காரணம்?

தென்மேற்கு பருவமழை என்பது மற்ற மாநிலங்களுக்குத்தானே தவிர. தமிழகத்துக்கு கிடையாது. தமிழகத்துக்கு குறைவாகவே பெய்யும். இது மழை மறைவு பிரதேசமாக இருக்கிறது. வட மாநிலங்களில் மழை அதிகமாக பெய்வது ஏன் என்றால் அந்தந்த பருவ காலங்களில் மழை பெய்யும் போது அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் உருவாகி, அப்படியே மத்திய இந்திய பகுதிகளான சட்டீஸ்கர், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் பகுதிகள் வழியாக பயணிக்கும். அப்போது கடந்து செல்லும் அந்த பகுதிகளில் மழை பெய்து கொண்டே செல்லும். வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் தென்மேற்கு பருவமழைக் காலங்களில் 10 நாட்களுக்கு ஒரு முறை காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகிக்கொண்டே இருக்கும். அதன் காரணமாக மழை அதிக அளவில் பெய்யும். பருவகாலங்களில் மழை சாதாரணமாக பெய்தாலும், காற்றழுத்தங்கள் உருவானால்தான் அதிக மழை பெய்யும் என்பது உறுதியாகும். வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் காற்றழுத்தம் உருவாகும் போது, தென் பகுதியில் உள்ள காற்று அதை நோக்கி செல்லும். நமக்கு வறண்ட வானிலையாக இருக்கும். மழையும் குறையும்.

* மேகவெடிப்பு வடக்கில் ஏன் அடிக்கடி ஏற்படுகிறது?

சமவெளிப்பகுதியில் மேகவெடிப்பு என்பது அரிதாகத்தான் நடக்கும். மலைப்பகுதிகளான இமாச்சல் பகுதி, உத்தரகாண்ட் போன்ற மலைப் பிரதேசங்களில் தான் மேக வெடிப்புகள் ஏற்படும். இந்த பகுதிகள் கடல் மட்டத்தில் இருந்து உயரமானவை. அப்போது மேகம் கொஞ்சம் ஈரப்பதம் கொண்டு இருந்தாலும் நீர் விரைவில் சேதாரம் ஆகிவிடும். நீர் சேரசேர அதை தாங்கமுடியாமல் மேகம் நீரை கீழே விட்டுவிடும். மொத்தமாக ஒரு இடத்தில் கொட்டிவிடும். சாதகமான சூழ்நிலை இருந்தால் அடுத்தடுத்து ஈரப்பதம் மேகத்தில் படிப்படியாக சேரும் போது, ஒரு கட்டத்தில் அந்த எடையை தாங்க முடியாமல் வெடித்து மழை கொட்டும். இதைத்தான் நாம் மேக வெடிப்பு என்கிறோம். இது மலைப் பிரதேசங்கள், கடலோரப்பகுதிகளிலும் நடக்கும். சாதாரண சமவெளிப்பகுதிகளில் இது போன்ற மேவெடிப்புகள் நடக்காது.

இதுபோன்ற சம்பவங்கள் நடக்கப் போவதை நாம் சொல்லிவிட முடியும். அதிகப்படியான மழை பெய்யும் என்று சொல்ல முடியும். அதற்காகத்தான் வானிலை ஆய்வு மையம் அதிக கனமழை பெய்யும் என்று அறிவிப்போம். இது 20 செமீக்கு மேல் பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் அறிவிக்கப்படுகிறது. அப்படி அறிவித்து விட்டாலே அங்கு மேக வெடிப்புகள் ஏற்படும் வாய்ப்புகளும் அடங்கிவிடும். மாநிலங்களில் உள்ள பேரிடர் மேலாண்மைத்துறைக்கு சொல்லி விடுவோம். அவர்கள் அது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுத்துவிடுவார்கள். மலைப்பகுதியில் பெரும்பாலும் மேடு பள்ளங்கள் இருக்கும் போது, இரண்டு மேடான பகுதிகளுக்கு இடையில் இருக்கும் பகுதியை நோக்கித்தான் மேகவெடிப்பு தண்ணீர் ஓடி வரும். அப்போது அந்த பகுதிகள் அடித்து செல்லப்படும். நிலச்சரிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

* மேகவெடிப்பு குறித்து முன்கூட்டியே சொல்ல நம்மிடம் கருவிகள் உள்ளனவா?

மேக வெடிப்பு நடக்கும் என்று சொல்வதை விட அதிகனமழை பெய்யும் வாய்ப்பு என்று அறிவித்து விட்டாலே, அதில் மேகவெடிப்பும் அடங்கும். அதாவது 24 மணி நேரத்தில் மழை விட்டு விட்டு பெய்வதற்கும். ஒரு மணி நேரத்தில் 25 செமீ-30 செமீ மழை பெய்வதற்கும் வேறுபாடு இருக்கிறது. இதில் ஒரு மணி நேரத்தில் பெய்யும் மழையைத்தான் நாம் மேகவெடிப்பாக கணக்கில் எடுத்துக் கொள்கிறோம். அப்போது விரைவில் தண்ணீர் வழிந்தோடுவதற்கு அவகாசம் இல்லாமல் அதிக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுவிடும். விட்டுவிட்டு பெய்தால் மழை நீர் வழிந்தோட நேரம் கிடைக்கும். அதனால் இதை மேக வெடிப்பு என்று சொல்வதை விட ‘Rainfall Insident’ என்று குறிப்பிட வேண்டும். குறுகிய காலத்தில் அதிக மழை பெய்வதைத்தான் மேகவெடிப்பு என்கிறோம். இது குறித்து முன்கூட்டிய கணித்து சொல்லக் கூடிய கருவிகள் உலக அளவில் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

* வட கிழக்கு பருவமழை அதிகமாக பெய்யுமா?

வடக்கிழக்கு பருவமழை குறித்த அறிவிப்பு செப்டம்பர் மாத இறுதியில் தான் தெரியும். தென்மேற்கு பருவமழை முடிந்தால் தான், அடுத்து வருகின்ற வட கிழக்கு பருவமழை குறித்து சாதகமான சூழல்களையும், பாதகமான சூழ்நிலைகளையும் கணிக்க முடியும். குறிப்பாக பசிபிக் பெருங்கடல் அழுத்த அளவு, உலக அளவில் உள்ள காரணிகளை ஆய்வு செய்து தான் தெரிவிக்க முடியும்.

* வட மாநிலங்களில் பெய்வது போல் தமிழகத்திலும் அதிக அளவில் பெய்தால் நாம் என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?

முக்கியமாக கனமழை எச்சரிக்கை கொடுக்கும் போது பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். காற்றழுத்த தாழ்வு மண்டலமோ, புயலோ வரும் போது கனமழை வரும் என்றால் மழையை தாண்டி காற்று தான் அதிகமாக வீசும். அதனால் மரங்கள் விழும், போர்டுகள் விழும், மின் கம்பிகள் அறுந்து விழும், தேங்கி இருக்கும் நேரத்தில் மேடு பள்ளங்கள் தெரியாது. அதனால் அந்த நேரங்களில் வெளியில் செல்லாமல் இருந்தால் விபத்துகளில் இருந்து நாம் தப்ப முடியும். மழை காலத்தில் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். இடியும் மின்னலும் சேர்ந்து வரும்போது கட்டிடங்களில் தான் தஞ்சம் அடைய வேண்டும். அதைவிட்டு மரத்தடியில் நிற்கக் கூடாது. விளம்பர போர்டுகள் அருகிலோ, இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிட சுவர்கள் அருகிலோ நிற்பதை தவிர்க்க வேண்டும்.

* தமிழ்நாட்டில் மேக வெடிப்பு பாதிப்புள்ள இடங்கள் ஏதாவது இருக்கிறதா?

ரேடார் இமேஜில் பார்ப்போம். அப்போது 3 மணி நேரத்துக்கு ஒரு முறை ‘NowCast’ எச்சரிக்கை கொடுத்துக் கொண்டே இருப்போம். இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் இணையத்தில் தெரிவிப்போம். இதுதவிர எங்கள் முன்னறிவிப்பு குழுவில் பலர் இணைந்துள்ளதால் அவர்களுக்கு உடனடியாக தகவல் போய்விடும். அதேபோல் ரேடார் இமேஜில், தெரியும் குறியீடுகள் அடிப்படையில் மழை பெய்வதற்கு ஏற்ப மஞ்சள், ஆரஞ்சு, ரெட் என்ற பல நிறங்களில் குறிக்கப்படும். தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை, தமிழ்நாடு ரிஸ்க் ரிடக்‌ஷன் துறைக்கும் தெரிவிப்போம். அவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிப்பார்கள்.

தமிழ்நாட்டில் மேக வெடிப்பு ஏற்படும் வாய்ப்பு மிக மிக குறைவு. பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளில் கடலில் இருந்து நிலத்துக்கும், நிலத்தில் இருந்து கடலுக்கும் காற்று ஓட்டம் இருந்துகொண்டே இருக்கும். அதில் வெப்பம் மற்றும் குளிர் ஆகிய பரிமாற்றம் நடக்கும். காற்று ஓட்டம் அதிகமாக இருக்கும் போது குளிர் காற்று அதன் வழியில் செல்லும். அப்போது அதிகமாக மழை பெய்யும் போது மேகவெடிப்பு நடக்க வாய்ப்புள்ளது. குறைந்த காற்றழுத்தம் உருவாகும் போது சில இடங்களில் அதிக மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. மலைப்பகுதிகளில் நடப்பது போல தரைப்பகுதிகளில் மேகவெடிப்பு நடக்க வாய்ப்பில்லை.

மேகவெடிப்பு இங்கு குறைவுதான். ஆனாலும் இல்லை என்றும் சொல்ல முடியாது. கடல் பகுதிகள், பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள பகுதியில் வெப்பமும், ஈரப்பதமும் பரிமாற்றம் நடக்கும். அதனால் தான் தென் பகுதியில் எப்போதும் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்படுகின்றன. வட மாநிலங்களில் பருவகாலம் தவிர மற்ற காலங்களில் வறட்சியாகத்தான் இருக்கும். நாம் வெப்ப மண்டலத்தில் இருக்கிறோம். அதனால் வருடம் முழுவதும் மழை பெய்யும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது.

* மேற்கு தொடர்ச்சி மலை, வயநாடு ஆகியவற்றில் மேக வெடிப்பு ஏற்படும் இடங்கள் உள்ளன என்று கூறப்படுகிறதே?

ஒரு இடத்தில் ஒரு மணி நேரத்தில் மழை பெய்ததா, இரண்டரை மணி நேரத்தில் மழை பெய்ததா என்று பார்க்க வேண்டும், நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி, கோவையில் வால்பாறை போன்ற இடங்களில் கூடுதலாக மழை பெய்வது வழக்கம். அங்கு 24 மணி நேர மழையைத்தான் கணக்கிடுவார்கள். கடல் மட்டத்தில் இருந்து நமது பகுதி உயரம் கிடையாது. மேற்கு தொடர்ச்சி மலை கடல் மட்டத்தில் இருந்து உயரம். அங்கு வயநாடு போன்ற பகுதிகள் பாதிக்க வாய்ப்புள்ளது. இந்த இடத்தில், இந்த அளவு மழை பெய்யும் என்ற அறிவியல் அறிவு உலகம் முழுவதும் கிடையாது. வளிமண்டலம் என்பது ஒரு திறந்த வெளி. ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் வெப்பநிலை, அழுத்தம் , ஈரப்பதம் மாறிக் கொண்டே இருக்கும். இது போன்ற மாற்றங்கள் ஏற்போதும் இது இயற்கை சமன்பாடு இதை நீங்கள் மாற்ற முடியாது. மாதிரிக்கும், இயல்புக்கும் இடையே வேறுபாடு இருக்கிறது. அதை தவிர்க்க முடியாது. இதற்கு எல்லை உண்டு.

* வட கிழக்கு பருவமழை எப்படி இருக்கும்?

மழைக்கான ‘மாதிரி’ என்பதை அடிப்படையாக கொண்டு ஒரு வருடத்தின் முன்னறிவிப்பை சொல்ல முடியும். அதில் ஒரு சிறு தவறு ஏற்பட்டாலும் கூட முழுவதும் தவறாகிவிடும். செப்டம்பர் இறுதியில் தான் அதுகுறித்து கணிக்க முடியும். எல்லா தரவுகளும் சரியாக இருந்தால் மட்டுமே வானிலை ஆய்வு மையத்தால் சொல்ல முடியும். இல்லை என்றால் அதை சொல்ல முடியாது. நீண்ட கால வானிலை ஆய்வு அறிக்கைகள் வெளியிடும் போது ‘டைபூன்’ என்கிற சூறாவளிக் காற்றுகள் எப்படி இருக்கிறது. பசிபிக் கடல் கடல் மட்டத்தில் எல்-நினோ நிலை எப்படி இருக்கிறது. என்பதை நாங்கள் ஆய்வு செய்த பிறகே சொல்ல முடியும். அதனால், காற்றின் தன்மைகளை ஆய்வுசெய்து தான் சொல்ல முடியும். வட கிழக்கு பருவமழை காலத்தில் நமக்கு வரும் மழைகள் எல்லாம் காற்றழுத்தங்கள், காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள், தாழ்வு மண்டலங்கள் ஆகியவற்றை பொறுத்தே மழை வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

* மேகவெடிப்பால் ஏற்படும் நிலச்சரிவை தடுப்பது எப்படி? ரமணன் பேட்டி

மேக வெடிப்புகள் மற்றும் நிலச் சரிவுகள் தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணன் கூறியதாவது: நிலச்சரிவுகளை பொறுத்தவரையில் மலைப் பகுதிகளில் போக்கு வரத்து வசதிக்காக அமைக்கப்படும் சாலைகள் ஒரு காரணம். அப்படி சாலைகள் அமைக்கும் போது, சாலை ஓரங்களில் வலுவான தடுப்புகளை அமைக்க வேண்டும். இது தவிர மலைப் பகுதிகளில் குடியிருப்புக்காகவும், சுற்றுலா வசதிக்காகவும் அதிக அளவில் கட்டிடங்களை கட்டுவதை தவிர்க்க வேண்டும். மேலும், மலைப் பகுதிகளில் சில இடங்களில் நீர் வசதிக்காக தண்ணீரை தேக்கி வைத்தல் கூடாது. மழை பெய்யும் காலங்களில் மழை நீர் வடிந்து கீழ் நோக்கி செல்லவும், வடிந்து செல்லவும் வசதிகள் செய்ய வேண்டும். குறிப்பாக இயல்பாக மலைப் பகுதிகளில் உள்ள பள்ளம் மற்றும் மேடுகள் அப்படி இருக்கும்படி விட்டுவிட வேண்டும். அவற்றை சமப்படுத்துவது கூடாது. இதுபோன்ற காரணங்கள் தான் மழைக் காலங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட காரணமாக அமைகின்றன. இதுகுறித்து புவியியல் துறை மற்றும் வானிலை ஆய்வுத் துறை இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ரமணன் தெரிவித்தார்.

* மேக வெடிப்பு வகைகள், வரையறை

மேகவெடிப்பு நிகழ்வுகள் இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய வானிலை மைய வரையறையின்படி ஒரு மணிநேரத்தில் 10 செ.மீ.க்கு மேல் மழை பெய்தால் அதை மேகவெடிப்பு ‘பி’ வகையில் வைக்கப்படுகிறது. 2 மணி நேரத்தில் 5 செ.மீ அல்லது அதற்கு மேற்பட்ட மழை பெய்தால் மினி மேகவெடிப்பு என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேகவெடிப்புகள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும், மத்திய இந்தியாவிலும், இமயமலை அடிவார மலைகளிலும், ஏற்படுகின்றன. இந்த நிகழ்வுகள் பொதுவாக இமயமலையின் அடிவார மலைகளிலும், இந்தியாவின் மேற்கு கடற்கரையிலும் அதிகாலை நேரங்களில் நிகழ்கின்றன. நிலப்பரப்பின் உட்புறத்தில் இவை பிற்பகல் நேரங்களிலும், தெற்கு தீபகற்பத்தில் இரவு நேரங்களிலும் ஏற்படுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளன.

மேகங்கள் நீர் பலூன்களைப் போன்றவை என்றும் அவை வெடித்து விரைவான மழைப்பொழிவை ஏற்படுத்தும் என்ற கருத்திலிருந்து “மேக வெடிப்பு” என்ற சொல் எழுந்தது. இந்த யோசனை பின்னர் நிரூபிக்கப்பட்டாலும், இந்த சொல் இன்னும் பயன்பாட்டில் உள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 10 செ.மீ (3.9 அங்குலம்) க்கு சமமான அல்லது அதற்கு மேற்பட்ட நீர் மேகங்களில் இருந்து கீழே விழும்போது அது ஒரு மேக வெடிப்பு ஆகும். ஸ்வீடிஷ் வார்த்தையான “Sky Fall” ஐ குறுகிய வெடிப்புகளுக்கு நிமிடத்திற்கு 1 மில்லிமீட்டர் (0.039 அங்குலம்) மற்றும் நீண்ட மழைப்பொழிவுக்கு மணிக்கு 50 மில்லிமீட்டர் (2.0 அங்குலம்) என வரையறுக்கிறது. மேகவெடிப்புக்கு காரணமான வெப்பச்சலன மேகம் தரையில் இருந்து 15 கிலோமீட்டர் (9.3 மைல்) உயரம் வரை நீட்டிக்க முடியும். மேக வெடிப்பின் போது, ​​சில நிமிடங்களில் 20 மில்லிமீட்டருக்கும் (0.79 அங்குலம்) அதிகமான மழை பெய்யக்கூடும்.

* நிலச்சரிவு தடுக்க முடியுமா?

கடந்த 2023ம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை காலத்தில் இமாச்சலபிரதேசத்தில் குறைந்தபட்சமாக 65 மேக வெடிப்பு நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் 31 நிகழ்வுகள் ஜூலை மாதத்திலும், அதன் தொடர்ச்சியாக 24 நிகழ்வுகள் ஆகஸ்ட் மாதத்திலும் நடந்துள்ளன. ஜூன் மாதத்தில் 9 நிகழ்வுகள் நடந்துள்ளன. கடந்த ஆண்டிலும், டிசம்பர் 2024, ஆகஸ்ட் 2025ம் ஆண்டுகளிலும் நிலச்சரிவுகள் நடந்துள்ளன. கால நிலை மாற்றம் குறித்த ஆய்வுகளின்படி, 2019ம் ஆண்டில் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா ஏழாவது இடத்தைப் பிடித்தது.

இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 ஜிகா டன் அளவுக்கு பசுமைக்குடில் (கிரீன்ஹவுஸ்) வாயுக்களை வெளியிடுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. திபெத்திய பீடபூமியில் வெப்பநிலை அதிகரிப்பதால் இமயமலை பனிப்பாறைகள் பின்வாங்கி, கங்கை, பிரம்மபுத்திரா, யமுனை மற்றும் பிற முக்கிய நதிகளின் ஓட்டங்களை பயமுறுத்துகிறது என்பது அதில் அடக்கம். கடந்த 2007ம் ஆண்டு இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) அறிக்கையில், இதே காரணத்திற்காக சிந்து நதி வறண்டு போகக்கூடும் என்று கூறுகிறது.

அசாம் போன்ற மாநிலங்களில் கடுமையான நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் அதிகரித்து வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் வெப்ப அலைகளின் அதிர்வெண் மற்றும் தீவிரம் அதிகரித்து வருகிறது. 1901 மற்றும் 2018க்கு இடையில் இந்தியாவில் வெப்பநிலை 0.7 °C (1.3 °F) அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1969-15 காலகட்டத்தில் இந்திய கோடை பருவமழைக் காலத்திற்கான 126 நிலையங்களின் மணிநேர மழைப்பொழிவு தரவுகளைப் பயன்படுத்தி இந்தியாவில் குறுகிய கால கனமழை நிகழ்வுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

சில மேக வெடிப்புகள்

* செப்டம்பர் 28, 1908 அன்று - மேக வெடிப்பு காரணமாக மூசி ஆற்றின் நீர்மட்டம் 3.4 மீட்டர் வரை உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் கரையோரங்களில் சுமார் 15,000 பேர் இறந்தனர் மற்றும் சுமார் 80,000 வீடுகள் அழிக்கப்பட்டன.

* ஆகஸ்ட் 15, 1997 அன்று, இமாச்சலபிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் உள்ள சிர்கானில் ஏற்பட்ட மேக வெடிப்பில் 115 பேர் கொல்லப்பட்டனர், மரணத்தின் சுவடு மட்டுமே எஞ்சியிருந்தது .

* ஆகஸ்ட் 17, 1998 அன்று, உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டத்தின் காளி பள்ளத்தாக்கில் மால்பா கிராமத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் மேக வெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட ஒரு பெரிய நிலச்சரிவில் 250 பேர் கொல்லப்பட்டனர், இதில் 60 கைலாஷ் மானசரோவர் யாத்ரீகர்கள் அடங்குவர். இறந்தவர்களில் ஒடிசி நடனக் கலைஞர் புரோதிமா பேடியும் ஒருவர்.

* அக்டோபர் 20, 2021 அன்று, தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் நகரத்திற்கு மேலே ஒரு மேக வெடிப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக ஒரே நாளில் 213 மிமீ மழை பெய்தது. அந்தப் பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பின, தென்னக்குடிபாளையம் ஏரியும் நிரம்பி வழிந்தது. வசிஷ்ட நதி நிரம்பி வழிந்தது, இதனால் ஆத்தூர் தடுப்பணை தண்ணீரால் நிரம்பி வழிந்தது. எந்த சேதமும் பதிவாகவில்லை.

* ஜூலை 8, 2022 அன்று, அமர்நாத் குகை கோயிலுக்குச் செல்லும் வழியில் பஹல்காமில் மேகவெடிப்பு ஏற்பட்டது.

* டிசம்பர் 18, 2023 அன்று, தூத்துக்குடி மாவட்டத்தில் 946 மிமீ மழையும், திருநெல்வேலி மாவட்டத்தில் 636 மிமீ மழையும் பதிவாகி, இறுதியில் 2023 தமிழ்நாடு வெள்ளத்திற்கு வழிவகுத்தது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் 24 மணி நேரத்தில் 700 மிமீ மழை பதிவாகியுள்ளது. புயல் உருவாகாமல் சமவெளிப் பகுதியில் பெய்த அதிகபட்ச மழை இதுவாகும்.

* ஜூலை 31, 2024 அன்று, உத்தரகாண்டின் பல பகுதிகளில் திடீர் வெள்ளம் மற்றும் மேக வெடிப்புகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆகஸ்ட் 5, 2025 அன்று, உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள கீர் கங்கா நதியின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டது.