Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காட்டுப்பள்ளி தனியார் நிறுவனத்தில் வடமாநில ஊழியர் சாவு; போலீசார் மீது கற்களை வீசி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்; 10க்கும் மேற்பட்ட போலீசார் காயம்; கண்ணீர் குண்டு வீசி தடியடி

சென்னை: காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில், வடமாநில வாலிபர் பலியான விவகாரத்தில் நிவாரணம் கேட்டு நூற்றுக்கணக்கான வாடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி, போலீஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் காட்டுப்பள்ளி தனியார் நிறுவனத்தில் பதற்றம் நிலவுகிறது.மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் எல் அண்ட் டி கப்பல் கட்டும் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக உத்தரபிரதேசத்தை சேர்ந்த அமரேஷ் பிரசாத் (35) வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அங்குள்ள வடமாநில தொழிலாளர்கள் தங்கும் குடியிருப்பில் வீட்டின் மாடியில் ஏறும்போது அமரேஷ் பிரசாத் தவறி விழுந்து காயமடைந்து உயிரிழந்தார். காட்டூர் போலீசார் சடலத்தை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வட மாநில தொழிலாளர்கள் ஒப்பந்த நிறுவனத்திடம் நஷ்டஈடாக ரூ.25 லட்சம் கேட்டுள்ளனர். பேச்சுவார்த்தை முடிவில் ரூ.5 லட்சம் கொடுப்பதாக கூறியுள்ளனர். இதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவில் விசாரணைக்குச் சென்ற காவல்துறையினர் மீது கற்களை வீசி வடமாநில தொழிலாளர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதில் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறி 1000க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டதால் பாதுகாப்புக்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, அவர்கள் மீது வடமாநில தொழிலாளர்கள் கற்களை வீசினர். தொடர்ந்து பாதுகாப்பு தடுப்புகளை வைத்து தற்காத்தபோதும் செங்குன்றம் துணை ஆணையர் பாலாஜி உள்பட 10க்கும் மேற்பட்ட போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் 4 பத்திரிகையாளர்களும் காயமடைந்தனர். இதனையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் அவர்களை விரட்டியடித்தனர். தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் செல்ல மறுத்து வடமாநில தொழிலாளர்கள் கூச்சல் எழுப்பினர். இதில் 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மேலும் கல் வீச்சில் காயமடைந்த வடமாநில தொழிலாளர்களை ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே சம்பவ இடத்தை ஆவடி காவல் ஆணையர் சங்கர் நேரில் சென்று ஆய்வு செய்தார். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது குறித்தும், காயமடைந்த காவல்துறையினர் விவரங்களையும் கேட்டறிந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொது சொத்துகளை சேதப்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு அதிகாரி உத்தரவை மீறுதல், ஆயுதங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் காட்டூர் போலீசார் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.