வடமாநில தொழிலாளர்களுக்கு பாரபட்சம் காட்டுவதில்லை; பிளவுபடுத்தும் அரசியல் செய்கிறார் மோடி: ஆர்.எஸ்.பாரதி!
சென்னை: பிளவுபடுத்தும் அரசியல் செய்கிறார் பிரதமர் மோடி என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;
பிளவுபடுத்தும் அரசியல் செய்கிறார் மோடி
பிளவுபடுத்தும் அரசியல் செய்கிறார் பிரதமர் மோடி. புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவது மோடிக்கு கைவந்த கலை. நாட்டின் ஒருமைப்பாட்டை காக்க வேண்டிய பிரதமர் மோடி தனது பொறுப்பை மறந்து பேசுகிறார் என அவர் தெரிவித்தார்.
ஒடிசாவில் தமிழரை இழிவுபடுத்தி மோடி பேசினார்
ஒடிசாவில் ஒரு தமிழரை இழிவுபடுத்தி பேசினார்களோ அதுபோல தற்போது இழிவுபடுத்தி பேசியுள்ளனர். பொய் சொல்வதில் மோடியும் அமித்ஷாவும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. பீகார் மக்களிடையே தமிழர்கள் குறித்து அவநம்பிக்கை பரப்புகிறார் பிரதமர் மோடி.
ஆதாரம் இருந்தால் பாஜக வழக்கு தொடாலாம்
தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதற்கு ஆதாரம் இருந்தால் பாஜக வழக்கு தொடரலாம். தமிழர்களையும் தென்னிந்தியர்களையும் அவமானம் செய்தவர்கள் பாஜகவினர். பீகாருக்கு தமிழ்நாட்டைவிட அதிகளவு நிதி கொடுத்தது பாஜக அரசு. தமிழ்நாட்டின் வளர்ச்சியை தாங்க முடியாமல் பாஜகவினர் அவதூறு செய்கின்றனர்.
இந்தி பேசும் மக்கள் தமிழ்நாட்டில் வளமாக உள்ளனர்
வடநாட்டு தொழிலாளர்களுக்கு எந்தவித பாரபட்சமும் இன்றி அனைத்து வசதிகளும் கிடைக்கிறது. பீகார், ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கிறது என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மோடிக்கு எதிராக கண்டன குரலை எழுப்ப வேண்டும்
ஒவ்வொரு தமிழரும் மோடிக்கு எதிராக கண்டன குரலை எழுப்ப வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சியைவிட மோசமான பிளவுபடுத்தும் ஆட்சியை மோடி நடத்துகிறார். 8 முறை மோடி தமிழ்நாட்டுக்கு வந்து பிரச்சாரம் செய்தபோதும் திமுகவின் செல்வாக்கு குறையவில்லை. தமிழ்நாட்டுக்கு 8 முறை பிரதமர் மோடி வந்தபோதிலும் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம்.
பீகார் வளர்ச்சியடையவில்லை: ஆர்.எஸ்.பாரதி
15 ஆண்டுகால நிதிஷ்குமாரின் ஆட்சியில் பீகார் வளர்ச்சியடையவில்லை. பீகார் வளர்ச்சியடையாததால்தான் தொழிலாளர்கள் தமிழ்நாடு நோக்கி வருகின்றனர். தமிழ்நாட்டின் திட்டங்களை பாஜக பின்பற்றுகிறது. இந்தியாவுக்கே வழிகாட்டியாக உள்ளது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
 
  
  
  
   
