சென்னை: தென்மேற்கு பருவமழை 16ம் தேதி விலக இருப்பதை அடுத்து, தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை 16-18ம் தேதிகளில் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா கூறியதாவது: இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது இரண்டு வார காலத்துக்கான வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை, வரும் 16ம் தேதி அல்லது 17ம் தேதியுடன் விலகும். அதேநேரத்தில் தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான வட கிழக்கு பருவமழை 16ம் தேதி அல்லது 18ம் தேதிக்கு இடைப்பட்ட நாளில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்நிலையில், அக்டோபர் மாதத்தில் இதுவரை பெய்த தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாகத்தான் இதுபோல குறைவான மழை அக்டோபர் மாதத்தில் பெய்துள்ளது.
வட மாவட்டங்களில் இயல்பாகவும், இயல்பைவிட அதிகமாகவும் பெய்துள்ள நிலையில், தென் மாவட்டங்களில் இயல்பாகவும், சில இடங்களில் இயல்பைவிட குறைவாகவும் பெய்துள்ளது. தமிழகத்தில் தற்போது தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழை 92 நாட்கள் பெய்யும். அதாவது அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரையில் பெய்யும். கடந்த 1ம் தேதி முதல் இதுவரையில் 50மிமீ வரை தான் பெய்துள்ளது. தமிழகத்தில் இந்த மாதத்தில் 170 மிமீ பெய்ய வேண்டும். ஆனால் அதற்கு குறைவாக பெய்துள்ளது. தற்போது நிலவும் வானிலை அமைப்பின்படி கிருஷ்ணகிரி உள்பட 15 மாவட்டங்களில் 11ம் தேதி பெய்யும். திருவண்ணாமலை, திருப்பத்தூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் மாலை இரவில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. தீபாவளி நாளில் பெய்யும் மழை நிலவரம் குறித்து அடுத்த வாரம் தெரிவிக்கப்படும்.
கடந்த கால வட கிழக்கு பருவமழையின் தரவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது வட கிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிக அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. எனவே, எத்தனை புயல்,காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகும் என்று தற்போது கணிக்க இயலாது. சென்னையை பொருத்தவரையில் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு 29 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. இயல்பாக சென்னையில் 450 மிமீ பதிவாக வேண்டும். ஆனால், 580 மிமீ பதிவாகியுள்ளது. வட கிழக்கு பருவமழை காலங்களில் புயல் சின்னம் உருவாகும் போது 200மிமீ அளவுக்கு மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும் தன்மையை பொருத்துதான் பருவமழையின் தீவிரம் குறித்து தெரியவரும். தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டில் திருச்சி, தூத்துக்குடி, கரூர், தர்மபுரி மாவட்டங்களில் குறைவாக பெய்துள்ளது. இருப்பினும், வட கிழக்கு பருவமழை இந்த ஆண்டில் இயல்பைவிட கூடுதாக பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.