கர்நாடகா: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 20,500 கன அடி நீர் திறப்பு. விரைவில் நீர் திறப்பு 40,000 கன அடியாக அதிகரிக்கலாம். நீர் திறப்பு அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றங்கரையோர பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தற்போது பருவமழை மிக தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதிலும் கடந்த ஒருவாரமாக பரவலாக மழை பெய்து வருவதால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தேனி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை காலத்திலேயே மாநிலத்தின் பல்வேறு பகுதியில் நல்ல மழை பெய்தது. இதனால், மாநிலத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வேகமாக நிரம்பின. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் மேட்டூர் அணை நடப்பாண்டில் 7வது முறையாக நிரம்பியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 86 சதவீதம் நீர்நிலைகள் முழு கொள்ளளவு எட்டியுள்ளன.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் 1551 ஏரிகளில் நேற்றைய நிலவரம் படி 57 ஏரிகளில் முழு கொள்ளளவு எட்டியுள்ளன.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் மற்றும் பூண்டி நீர் தேக்கங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், தேர்வாய் கண்டிகை, பூண்டி, வீரணம், சோழவரம் ஆகிய ஏரிகளில் நீர் இருப்பு உள்ளது. இது மேலும் அதிகரிக்கக்கூடும்.
அணைகளில் கடந்தாண்டை விட இந்தாண்டு நீரின் அளவு அதிகமாக உள்ளது. மேலும் அனைத்து நீர்த்தேக்கங்களுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. அணையின் பாதுகாப்பு கருத்தி அவ்வப்போது நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் அணைகள் மற்றும் ஏரிகள் கண்காணிக்க பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று கர்நாடகா மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 20,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. விரைவில் 40,000 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது . இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்பு உள்ளதால் காவிரி ஆற்றங்கரையோர பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.