Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வடகிழக்கு பருவமழை; மீட்பு நடவடிக்கைகளுக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு நடவடிக்கைகளுக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தற்போது நிலவிவரும் வானிலை நிலவரம் குறித்தும், பேரிடர் மேலாண்மைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு முன்னெடுப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டமும் நடைபெற்றது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கையின் தெற்குப் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலவுகிறது என்றும், இதன் காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, இராமநாதபுரம், ராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் ஒரு ஆய்வு கூட்டமும், கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களின் தலைமையில் மூன்று கூட்டங்களும் நடைபெற்றன.

இப்பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சர் பல்வேறு துறை உயர் அலுவலர்களும் மற்றும் மாவட்ட நிருவாகமும் மேற்கொள்ள வேண்டிய ஆயத்த நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கினார். நிகழ்நேர பேரிடர் கண்காணிப்பிற்காக பொருத்தப்பட்ட தானியங்கி வானிலை கருவிகள், புயல் சீற்ற மாதிரி, மாநகராட்சிகளுக்கான வெப்ப அலை செயல்பாட்டுத் திட்டம், சென்னை நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு திட்டம், தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமையின் ஒருங்கிணைந்த வெள்ள கண்காணிப்பு மையம், தரம் மேம்படுத்தப்பட்ட மாநில அவசர கால செயல்பாட்டு மையம், பொதுமக்களுக்கான டி.என்.அலர்ட் (TN Alert) செயலி மற்றும் அரசு அலுவலர்களுக்கான டி.என். ஸ்மார்ட் 2.0 (TN Smart 2.0) இணையதளம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை திட்டம் 2025-க்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டது.

கடந்த 2021-2025 ஆம் ஆண்டுகளில் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு (SDRF) ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்த ரூ.5351.9 கோடியை விட தமிழ்நாடு அரசு கூடுதலாக ரூ. 9170.48 கோடி செலவு செய்துள்ளது என்றும், இந்த நிதியாண்டுக்கான SDRF 2வது தவணை ரூ. 661.20 கோடியும், SDMF 2-வது தவணை ரூ.165.30 கோடியும், ஆக மொத்தம் ரூ. 826.50 கோடி ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டியுள்ளது என்றும் முதலமைச்சர் அவர்களிடம் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், முதலமைச்சர் பேசும்போது; அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும், குறிப்பாக, முதன்முறையாக தமிழ்நாட்டில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பேரிடர் மேலாண்மை சிறந்த முறையில் கையாளப்பட்டு வருவது பெருமையாக உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் 1,740 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பணிகள் குறித்தும் - ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்த தொகையைவிட, நாம் அதிகமாக பேரிடர் நிவாரணப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்து, பணிகள் மேற்கொண்டு வருவது குறித்தும், மக்கள் நன்மைக்காக அவர்களின் பாதுகாப்பில் அக்கறை கொண்டு இப்பணிகளை நாம் தொய்வில்லாமல் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார். மழைக்காலங்களில் அதிகமாக பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்கள்தான். அதனால், இவ்வரசு பொறுபேற்றப்பிறகு, பேரிடர் மேலாண்மையில் தனி கவனம் செலுத்தி, இயற்கை இடர்பாடுகளின்போது ஏற்படும் பாதிப்புகளை பெருமளவு குறைப்பதற்கு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருவதாகவும், அது அப்படியே தொடர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பே, ஆயத்த கூட்டங்களை நடத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருப்பதோடு, மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுக் கூட்டங்களையும் தான் நடத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும், அரசு உயர் அதிகாரிகளும் களத்தில் ஆய்வு செய்துகொண்டு, தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்ததோடு, பேரிடர் மேலாண்மைக்குத் தேவையான நிதியை முறையாக ஒதுக்கீடு செய்து, முறையாக பயன்படுத்தி, மக்கள் பயன்பெறும் வகையில் அவர்களுடைய பணி அமைய வேண்டும் என்றும், காலநிலை மீள்தன்மைக்குத் தேவையான நடவடிக்கைகளையும் தொடர்ந்து, கவனத்துடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், அலுவலர்களை கேட்டுக் கொண்டார்.

வரும் 29 மற்றும் 30-ஆம் தேதிகளில், குறிப்பிட்ட சில மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் (Red Alert) என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளதை தொடர்ந்து, அனைத்து அரசு துறைகளும், குறிப்பாக - வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, மீன்வளத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து, மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அத்துடன், தேவையான மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை உடனடியாக அனுப்பி வைத்திடவும், மீட்பு மற்றும் நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்து, மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அங்கு முறையாக வழங்குவதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

தலைமைச் செயலாளர் ஏற்கெனவே அறிவுறுத்தியபடி, அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்ததோடு, கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த எல்லா பேரிடர் நிகழ்வுகளையும் சிறப்பாக எதிர்கொண்டு, பணியாற்றிய அனைத்து அலுவலர்களையும் பாராட்டி, நன்றி தெரிவித்து, தொடர்ந்து இப்பணிகளை சிறப்பான வகையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், வருவாய் நிருவாக ஆணையர்/கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.சாய்குமார் எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார்,

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பெ.அமுதா, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பி. சந்திரமோகன், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், நீர்வளத்துறை செயலாளர் ஜெ. ஜெயகாந்தன், நெடுஞ்சாலைத் துறை செயலாளர் இரா. செல்வராஜ், உயர்கல்வித் துறை செயலாளர் பொ. சங்கர், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் நா. சுப்பையன், பேரிடர் மேலாண்மை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் சீமா அகர்வால், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சௌ. டேவிட்சன் தேவாசிர்வாதம், பெருநகர காவல் ஆணையர் ஆ.அருண், மற்றும் காவல்துறை / அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.