வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல்நாளே விடியவிடிய வெளுத்து கட்டியது தென்மாவட்டங்களில் வெள்ளம்; கடலூரில் மின்னல் தாக்கி 4 பேர் பலி; கொங்கு, வட மாவட்டங்களிலும் கனமழை, குற்றாலத்தில் குளிக்க தடை
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல்நாளான நேற்று தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடலூரில் மின்னல் தாக்கி 4 பெண்கள் பலியாகினர். கொங்கு மற்றும் வட மாவட்டங்களிலும் மழை கொட்டியது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16ம் தேதி துவங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி முதல்நாளான நேற்று தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகளவில் மழை கொட்டியது.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை, பாளையங்கோட்டை, நெல்லை, சேரன்மகாதேவி, களக்காடு, மணிமுத்தாறு, நாங்குநேரி, மானூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய மழை கொட்டியது. பின்னர் சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு நேற்று பிற்பகல் முதல் மீண்டும் அடை மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்கியது.
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகரில் பாளையங்கோட்டை, டவுன், புதிய பஸ் ஸ்டாண்ட், நெல்லை சந்திப்பு, தியாகராஜநகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் நேற்றிரவு முதல் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் 15 செமீ மழை கொட்டித் தீர்த்தது. இதனால் திருச்செந்தூரில் பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் முழுவதும் குளம் போல் மிதந்தது.
மேலும் சாத்தான்குளம், குலசேகரன்பட்டினம், உடன்குடி, மெஞ்ஞானபுரம், நாசரேத், ஆழ்வார்திருநகரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை காலை வரை கொட்டியது. இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் மழை வெளுத்து வாங்குகிறது. குற்றாலம் மெயினருவி, பழைய குற்றாலம் அருவியில் அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கருப்பாநதியில் 22.50 மில்லி மீட்டர் மழை பதிவானது. கன மழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
குமரி: குமரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கி, காலை 7.30 மணி வரை தொடர்ந்து 2 மணி நேரம், சாரல் மழை பெய்தவண்ணம் இருந்தது. பின்னர் மழையின் தாக்கம் குறைந்தது. இருப்பினும் லேசான தூறல் நீடித்தது. இதனால் பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர் குடைபிடித்தவாறு சென்றனர். நேற்று காலை வரை அதிகபட்சமாக குருந்தன்கோடு பகுதியில் 38 மி.மீ மழை பெய்திருந்தது. குமரி மாவட்டத்தில் மீண்டும் ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக, ரப்பர் பால்வெட்டும் பணிகள் பாதிக்கப்பட்டன. செங்கல் உற்பத்தி தொழிலும் முடங்கியுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. மாநகரில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மதியத்திற்கு மேல் கவுண்டம்பாளையம், வடகோவை, கணபதி, காந்திபுரம், டவுன்ஹால், பீளமேடு, ராமநாதபுரம், குனியமுத்தூர், உக்கடம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இந்த மழையினால் ரயில்நிலையம் மற்றும் கோவை அரசு மருத்துவமனை முன்புறம் ரோட்டில் மழைநீர் ஆறாக ஓடியது.
மாலை 4 மணி அளவில் பள்ளி முடிந்து மாணவ, மாணவிகள் வெளியேறும் சமயத்தில் மழை பெய்து கொண்டிருந்ததால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வீடு திரும்ப முடியாமல் அவதியடைந்தனர். கோட்டைமேடு வின்சென்ட் ரோட்டில் உள்ள நல்லாயன் பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் புகுந்தது. இதே போல ஈரோடு, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை மதுரை, விழுப்புரம், கடலூர், உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று பெய்த மழையால் பொதுமக்கள் கடும்
அவதிக்குள்ளாகினர்.
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் வேலூரில் நேற்று மதியம் இடிமின்னலுடன் மழை பெய்தது. அதேபோல் காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், பொன்னை போன்ற பகுதிகளில் மதிய நேரத்தில் மழையும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்தது. மேலும் அணைக்கட்டில் லேசான சாரல் மழையும், மாவட்டத்தில் பரவலாக மழையும் பெய்தது. மின்னல் தாக்கி 4 பெண்கள் பலி: கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்.
இவருக்கு சொந்தமான விளைநிலத்தில் அவரது மனைவி ராஜேஸ்வரி (40) உள்ளிட்ட பெண்கள் நேற்று மக்காச்சோளம் களையெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை முதலே வேப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து கொண்டிருந்தது. மாலையில் இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது சிவக்குமார் விளை நிலத்தில் பலத்த இடி சத்தத்துடன் மின்னல் தாக்கியது. இதையடுத்து அங்கு வேலை செய்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
நீண்ட நேரத்துக்குபின் தொழிலாளர்கள் அங்கு சென்றபோது விளைநிலத்தில் களையெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த நில உரிமையாளர் சிவக்குமாரின் மனைவி ராஜேஸ்வரி (40), விவசாய கூலி வேலைக்கு வந்திருந்த கழுதூர் கிராமத்தை சேர்ந்த வேலு மனைவி கனிதா (35), ராமசாமி மனைவி பாரிஜாதம் (40), அர்ச்சுனன் மகள் சின்னபொண்ணு என்கிற ராஜேஸ்வரி (41) ஆகிய 4 பேரும் உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், மின்னல் தாக்கியதில் கழுதூரைச் சேர்ந்த கதிரவன் மனைவி தவமணி (32) என்பவர் மயக்கமடைந்து விளைநிலத்தில் கிடந்தார். அவரை சக தொழிலாளர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். வடகிழக்கு பருவ மழை நேற்று துவங்கிய முதல் நாளிலேயே மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
* ஊட்டி, கொடைக்கானலில் கடும் பனிமூட்டம்: மக்கள் அவதி
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக மேக மூட்டம் மற்றும் அவ்வப்போது சாரல் மழையும், சில சமயங்களில் கனமழையும் பெய்து வருகிறது. அதேநேரம் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் எந்நேரமும் மேக மூட்டம் மற்றும் அவ்வப்போது சாரல் மழையின் காரணமாக கடும் குளிர் நிலவி வருகிறது. இரவு நேரங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால், முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படியே வாகனங்களை இயக்குகின்றனர்.
நேற்றும் காலை முதல் மாலை வரை மேக மூட்டம் சற்று சாரல் மழை என மாறுபட்ட காலநிலை நிலவியதால் குளிர் அதிகமாக காணப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது.
நேற்று அதிகாலை வேளையில் ஏரி சாலை, மூஞ்சிக்கல், அண்ணா சாலை, அப்சர்வேட்டரி, உகார்த்தே நகர், ஆனந்தகிரி, சீனிவாசபுரம், கவி தியாகராஜர் சாலை, பேருந்து நிலையம், லாஸ்காட் சாலை, கல்லுக்குழி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் வத்தலக்குண்டு, பழநி பிரதான மலைச்சாலைகளில் அடர்ந்த பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் சாரல் மழையால் சுற்றுலா தலங்கள் சுற்றுலாப்பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
* வாய்க்காலில் மூழ்கி திமுக நிர்வாகி பலி
கடலூர் மாவட்டம் சிதம்பரம் முத்துக்காமாட்சி அம்மன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சிவராமன் மகன் திராவிடதாசன்(31). குமராட்சி ஒன்றிய திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர். இவர், சிதம்பரம் அருகே வக்காரமாரி கிராமத்தில் உள்ள வடக்கு ராஜன் வாய்க்கால் ஷட்டர் பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது வாய்க்காலில் இறங்கிய போது, மழை காரணமாக நீர் வரத்து அதிகமாக இருந்ததால் திராவிடதாசன் நீரில் அடித்து செல்லப்பட்டார். தகவலின்படி தீயணைப்பு துறை வீரர்கள் வந்து வாய்க்காலில் இறங்கி தேடினர். இரவானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் நேற்று காலை அவரது உடல் மீட்கப்பட்டது.
* திருச்செந்தூர் முருகன் கோயிலில் தண்ணீர் புகுந்தது
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை அதிக கனமழை பெய்தது. அதிகபட்சமாக திருச்செந்தூரில் 14.6 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. இதனால் கோயில் நகரமான திருச்செந்தூர் சன்னதி தெரு, ரத வீதிகள், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.
இதேபோல் பந்தல் மண்டபம் வழியாக சிவன் கோயில் உள்ளேயும் நீர் புகுந்தது.
அதே போல சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் பெய்த மழையால் சண்முக விலாச மண்டப படிக்கட்டு வழியாகவும், ராஜகோபுர வாசல் படிக்கட்டு வழியாகவும் உள் பிரகாரங்களில் மழைநீர் புகுந்தது. இதனால் வரிசையில் நின்றிருந்த பக்தர்கள் மழை நீரை கடந்து சென்று சுவாமி தரிசனம் செய்வதில் சிரமத்திற்குள்ளாகினர். இதையடுத்து பணியாளர்கள் கோயில் உள்ளே புகுந்த மழை நீரை வெளியேற்றும் பணியில் முனைப்புடன் ஈடுபட்டனர்.