Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு: டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் குறித்தும் ஆய்வு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து முன்னேற்பாடு நடவடிக்கைகள் துரிதப்படுத்த வேண்டும் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.

கடந்த 16ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக அக்டோபர் 16, 17 மற்றும் 18 ஆகிய மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் பரவலான மழை பெய்தது. குறிப்பாக கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் சராசரியாக 12 மி.மீ. மழை பெறப்பட்டது.

அதனையொட்டி, திருவாரூர், தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மேற்கொண்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக கடந்த 19ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இருந்து ஆய்வு மேற்கொண்டு, முன்னேற்பாடு பணிகளை துரிதப்படுத்தவும், கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லவும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொண்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டு, கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லவும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாக மூலம் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். இந்த மாவட்டங்களில் சராசரியாக 56.61 மி.மீ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த கூட்டத்தில், மழையால் பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் தங்குவதற்காக முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், முகாம்களில் மக்களுக்கு வழங்கிட உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் மேற்கொண்டு வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும், மழைநீர் தேங்கும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழையினால் ஏற்படும் பாதிப்புகளை சீர்செய்திட ஜேசிபி இயந்திரங்கள், படகுகள், மோட்டார் பம்புகள், மரஅறுப்பான்கள், லாரிகள் மற்றும் 51,639 மின் கம்பங்கள், 1849 மின் மாற்றிகள், 1187 மின் கடத்திகள் போன்ற தேவையான அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தின்போது நெல் கொள்முதல் சேமிப்பு, நகர்வு மற்றும் அரவை குறித்தும் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி நடத்திட வேண்டும் என்றும், மழையால் நெல் மூட்டைகள் சேதம் அடையாமல் பாதுகாத்திட வேண்டும் என்றும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பெறப்பட்டுள்ள நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை துரிதப்படுத்திட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.

மேலும், 19.10.2025 அன்று ஈரப்பத அளவை 17 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக தளர்வு வழங்குமாறு தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிற்கு முன்மொழிவு அனுப்பியுள்ளதை சுட்டிக்காட்டி, இது குறித்து ஒன்றிய அரசின் ஒப்புதல் பெற அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வு கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர் சாய்குமார், சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் அமுதா, பேரிடர் மேலாண்மை ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன், சென்னை மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன், நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலர் செல்வராஜ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

கண்துஞ்சாமல் செயல்பட்டு மக்களை காப்பாற்றுவோம்

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு: திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையை எதிர்கொள்வது குறித்து, இன்றும் (நேற்று) காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை கூட்டத்தை நடத்தினேன். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளவும் உத்தரவிட்டு, எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தேன். மக்கள் பிரதிநிதிகளும், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.