வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்: கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!
சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்கு பருவமழை ஒருசில தினங்களில் தொடங்க உள்ள நிலையில், இதற்கான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு தொடர்பாக சென்னை ரிப்பன் மாளிகையில் இருக்கக்கூடிய கட்டுப்பாட்டு அறையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கே.என்.நேரு, மேயர் பிரியா மற்றும் ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது கட்டுப்பாட்டு கண்காணிப்பு பணிகள் செய்யப்படுவது வழக்கம்.
அதை தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் உள்ள சுரங்கப்பாதை, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவது குறித்து சிசிடிவி காட்சிகள் மூலமாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும். அதுமட்டுமின்றி பொதுமக்களிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு கட்டுப்பாட்டு அறை தயார் நிலையில் இருக்கிறதா என்பது குறித்தும் அதனை தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது என்பது குறித்தும் மாநகராட்சி அதிகாரிகளிடம் துணை முதல்வர் கேட்டறிந்தார். அதுமட்டுமின்றி தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட பொதுமக்களிடம் பேசிய துணை முதல்வர் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்; சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்த நிலையில், chennaicorp-இல் செயல்படுகிற ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறையில் இன்று ஆய்வு மேற்கொண்டோம். அதிக மழைப்பொழிவை எதிர்கொண்ட மண்டலங்களின் விவரம் - சுரங்கப்பாதைகளின் நிலை - மோட்டார்கள் இருப்பு - மழை தொடர்பாக Online மற்றும் Helpline வழியாக பொதுமக்கள் அளித்த புகார்கள் உள்ளிட்டவை குறித்து அங்குள்ள பணியாளர்களிடம் கேட்டறிந்தோம். அவற்றின் மீது உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.