Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வட சென்னை அனல் மின் நிலையங்களின் மின் உற்பத்தி, வருடாந்திர பராமரிப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார் ராதாகிருஷ்ணன்

திருவள்ளூர்: வட சென்னை அனல் மின் நிலையங்களின் மின் உற்பத்தி, வருடாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல (SEZ) அனல்மின் நிலைய திட்ட கட்டுமான பணிகளை மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், நேரில் ஆய்வு செய்தார்.திருவள்ளூர் மாவட்டம், வட சென்னை அனல் மின் நிலையம் நிலை 1 ல் அலகு 2 மற்றும் 3 ல் மின் தேவைக்கேற்ப மின் உற்பத்தி செய்யப்படுவதையும், முக்கிய தளவாடப் பொருட்கள் மற்றும் போதிய அளவு நிலக்கரி இருப்பையும் மின்சார வாரிய தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன், நேரில் சென்று ஆய்வு செய்து உறுதி செய்தார்.

பின்னர், அலகு 1 ல் கடந்த 05.08.2025 முதல் நடைபெற்று வரும் முக்கிய வருடாந்திர பராமரிப்பு பணிகளான ஏர் ப்ரீ ஹீட்டர் மற்றும் புகை வெளியேறும் குழாய்கள் மாற்றும் பணிகளை பார்வையிட்டு குறிப்பிட்ட கால அளவிற்குள் அனைத்து பராமரிப்பு பணிகளையும் முடித்து அலகு 1 ல் மீண்டும் மின் உற்பத்தியினை துவக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதன்பின்னர், வடசென்னை அனல்மின் நிலையம் நிலை 2ற்கு (2x600 மெ.வாட்.) சென்று இரண்டு அலகுகளிலும் மின் உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்தார். மேலும், வடசென்னை அனல்மின் நிலையம் நிலை 3 (1x800 மெ.வாட்) அனல்மின் நிலையத்தினை ஆய்வு செய்து, அங்கு நடைபெற்று வரும் இயற்கை வளிம குளிரூட்டும் உயர் கோபுரத்தில் பழுது நீக்கும் பணிகளை பார்வையிட்டு, வரும் பருவமழை காலத்திற்குள் வடசென்னையில் உள்ள அனைத்து மின் நிலையங்களிலும் முழு மின் உற்பத்திசெய்யப்பட வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.

ஆய்வுக்குப்பின், திருவள்ளூர் மாவட்டம், வாயலூரில் தற்போது நடைபெற்று வரும் 2 x 660 MW மெகா வாட் திறனுடைய எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உய்ய அனல் மின் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது, கட்டுமானத்தில் உள்ள சுழலி, மின்னாக்கி, கொதிகலன், வளிம காப்பு மின்நிலையம்(GIS), வளிம இழுப்பு குளிரூட்டு கோபுரம் (NDCT) உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் கட்டுமான வளர்ச்சியை ஆய்வு செய்தார். மேலும் கட்டுமான பணிகளுக்கு இடையூறான நெருக்கடிகள் ஏதேனும் உள்ளதா என்று கேட்டு அறிந்து கொண்டார். மேற்படி ஆய்வு நிறைவடைந்த பின் மின்வாரிய தலைவர் திட்டபணிகளின் தற்போது முடிவடைற்துள்ள கட்டுமான 70% பணிகளை நேரடியாக பார்வையிட்டு, திட்டப்பணிகளை விரைந்து முடிக்கும் விதமாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும், தற்போதைய திட்ட பணிகள் தொய்வின்றி நடைபெற இடையூறாக நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அறிவுறித்தினார்.

திட்டபணிகளை விரைந்து முடித்து மின் நிலையத்தின் உற்பத்தியை வரும் மார்ச் 2026 க்குள் உறுதி செய்ய பெல் நிறுவன அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வில் மின்வாரிய தலைவருடன் கே. முத்துகிருஷ்ணன், இயக்குநர்/தொழில்நுட்பம்/தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் (மு.கூ.பொ.), வடசென்னை அனல்மின் நிலையங்களின் தலைமை பொறியாளர்கள் பி. பாலமுருகேசன், பி. டி. மணிவர்மன், டி. முருகன் மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் பெல் நிறுவன பொது மேலாளார் ஸ்ரீஜித் உள்ளிட்ட பொறியாளர்களும் பங்குபெற்றனர்.