Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

*கலெக்டர் சந்திரகலா ஆய்வு

காவேரிப்பாக்கம் : ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் சந்திரகலா நேற்று ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள் குட்டைகள் உட்பட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இதனால் பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நீர்வளத்துறை அதிகாரிகள் இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவாக காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இரவு பகலாக கனமழை கொட்டியது. நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை மாவட்டத்தில் அதிகபட்சமாக அரக்கோணத்தில் 131.2 மி.மீ. மழை பதிவானது. இதேபோல், ஆற்காடு 36.6, சோளிங்கர் 31.4, மின்னல் 22.4, பாலாறு அணைக்கட்டு 26.2, வாலாஜா 23.6, காவேரிப்பாக்கம் 18.8, ராணிப்பேட்டை 17.2, அம்மூர் 17, பனப்பாக்கம் 14.4, கலவை 2.1 மி.மீ. மழை பெய்தது.

இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் சந்திரகலா அதிகாரிகளுடன் நேற்று நேரில் ஆய்வு செய்து விவரங்களை கேட்டறிந்தார்.

அதன்படி, காவேரிப்பாக்கம் அடுத்த உத்திரம்பட்டு கிராமத்தில் இருந்து ஆயர்பாடி செல்லும் சாலையில் மழை வெள்ளத்தால் போக்குவரத்து தடைபட்டு உள்ளதை கலெக்டர் சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், நெமிலி ஊராட்சி ஒன்றியம் மேலபுலம் அரசினர் மேல்நிலைப் பள்ளி அருகே தேங்கியுள்ள மழைநீரை பார்வையிட்டு அவற்றை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, காவேரிப்பாக்கம் ஒன்றியம், கரிவேடு ஊராட்சியில் 32 பழங்குடியின குடும்பங்களுக்கு பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் திட்டத்தின் கீழ் தலா ரூ.5.07 லட்சம் மதிப்பில் 65 வீடுகள் கட்டப்பட்டு வருவதை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவப்பிரகாசம், சுமதி, ஜெயஸ்ரீ, தாசில்தார் ராஜலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்கீதா தாஸ், மனோகரன், வருவாய் ஆய்வாளர் மகேஷ், கிராம நிர்வாக அலுவலர் நவீன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

நெமிலி: நெமிலி மற்றும் பனப்பாக்கம், திருமால்பூர், அசநெல்லிகுப்பம், பள்ளூர், கீழ்வீதி, அகவலம், நெடும்புலி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளை கலெக்டர் சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்படி, பனப்பாக்கம் பேரூராட்சியில் ஓச்சேரி- நெமிலி சாலையில் தேங்கிய மழைநீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியை கலெக்டர் ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார். அப்போது, பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன், மன்ற உறுப்பினர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து, பள்ளூர் ஊராட்சியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதை மின்மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், பள்ளூர் பெரிய ஏரி மதகில் ஏற்பட்ட பழுதை சீரமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்து, மழைநீர் குறைந்த பிறகு புதிய மதகு கட்ட திட்டமிடுமானு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, அரக்கோணம் தாலுகா, பள்ளூர் சப்த கன்னியம்மன் கோயில் பின்புறத்தில் உள்ள விவசாய நிலங்களில் மழையால் வெள்ளநீர் ஏரியில் இருந்து உட்புகந்துள்ளதை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்பேரில், விவசாய நிலங்களை பார்வையிட்ட கலெக்டர் சந்திரகலா பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், வரும் காலங்களில் விவசாய நிலங்களில் மழை வெள்ளநீர் புகாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளருக்கு உத்தரவிட்டார்.அப்போது, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் குமார், தாசில்தார் வெங்கடேசன், பிடிஓக்கள் ஜெயஸ்ரீ, சிவக்குமார், உதவி பொறியாளர் பழனி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.