Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நேபாளத்தில் இயல்பு நிலை திரும்பியது: இடைக்கால தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு

காத்மாண்டு: 2 நாட்கள் வன்முறைக்கு பின்னர் நேபாளத்தில் இயல்பு நிலை திரும்பியது. நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அரசுக்கு எதிராக ஜென் இசட் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் கடந்த திங்கட்கிழமை போராட்டத்தை தொடங்கினர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 இளைஞர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் போராட்டம் கடும் தீவிரமடைந்து வன்முறையாக மாறியது. நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் உட்பட பெரும்பாலான அரசு கட்டிடங்களை போராட்ட இளைஞர்கள் தீ வைத்து எரித்தனர். அதிபர், முன்னாள் அதிபர்கள், பிரதமர், அமைச்சர்கள் என முக்கிய அரசியல் தலைவர்களின் வீடுகள், கட்சி அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

அமைச்சர்களை போராட்டக்காரர்கள் தெருவில் ஓட ஓட விரட்டி அடித்தனர். நிலைமை கைமீறிப் போனதைத் தொடர்ந்து, பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலகினார். அவரது அமைச்சரவை சகாக்கள் பலரும் ராஜினாமா செய்தனர். இந்த போராட்டத்தால் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. ஏராளமான இந்தியர்கள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தனர். 2 நாள் வன்முறையால் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்த நிலையில், நாட்டின் பாதுகாப்பு பொறுப்பை நேற்று முன்தினம் இரவு முதல் ராணுவம் ஏற்றுக் கொண்டது. இந்நிலையில், நாடு தழுவிய ஊடரங்கு மற்றும் கட்டுப்பாட்டு உத்தரவுகளை ராணுவம் நேற்று பிறப்பித்தது.

போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. தெருக்கள், முக்கிய சாலைகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். இதனால் நேற்று வன்முறை சம்பவங்கள் அடங்கின. மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு ராணுவம் அறிவுறுத்தியதால் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. அத்தியாவசிய பொருட்களை ஒருசிலர் மட்டும் சாலைகளில் சென்றபடி இருந்தனர். தெருக்கள், சாலைகளில் போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்ட வாகனங்கள் எலும்புக் கூடாக கிடந்தன. பல அரசு கட்டிடங்கள் தீயில் கருகி காட்சி அளிக்கின்றன. ஓட்டல்கள் பலவும் எரிக்கப்பட்டுள்ளன.

நேற்று மாலை 5 மணியுடன் ராணுவத்தின் கட்டுப்பாட்டு உத்தரவுகள் முடிவடைந்த நிலையில், புதிதாக போராட்டம் எதுவும் நடக்காததால் நேபாளத்தில் இயல்பு நிலை திரும்பியது. இதனிடையே நேபாள நாட்டின் இடைக்கால தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர், பிரதமர் என அடுத்தடுத்து ராஜினாமா செய்த நிலையில் இடைக்கால தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.