Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நாளை மறுநாள் 121 தொகுதியில் வேட்பு மனுதாக்கல் தொடக்கம்: தொகுதி பங்கீட்டில் கூட்டணி கட்சிகளிடையே இழுபறி: சிராக் பஸ்வான் வெளியேறுகிறார்? துணை முதல்வர் பதவி கேட்கும் விஐபி கட்சி

புதுடெல்லி: பீகாரில் நாளை மறுநாள் முதற்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தொடங்கும் நிலையில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இழுபறி நீடிப்பதால், உடன்பாடு எட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளன.

இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் கூட்டணித் தலைவர்கள் கூறுகையில், ‘கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் இதுகுறித்த இறுதி அறிவிப்பு வெளியாகும்’ என்று தெரிவித்துள்ளனர். கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள இந்த புதிய உடன்பாட்டின்படி, பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 முதல் 102 தொகுதிகளில் சரிசமமாகப் போட்டியிட உள்ளன.

மீதமுள்ள 20 முதல் 30 தொகுதிகளை லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்), எச்ஏஎம் மற்றும் ஆர்எல்எம் போன்ற சிறிய கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பீகார் மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான் மற்றும் சிராக் பஸ்வான் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தச் சூழலில், சிராக் பஸ்வான் கட்சி தங்களுக்கு 45 முதல் 54 தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் கடுமையாக வலியுறுத்தி வருகிறது.

கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் பீகாரில் போட்டியிட்ட ஐந்து தொகுதிகளிலும் வெற்றியைப் பதிவு செய்ததைச் சுட்டிக்காட்டி, தனது செல்வாக்கின் அடிப்படையில் இந்த கோரிக்கையை அக்கட்சி முன்வைத்துள்ளது. ஆனால், பாஜகவோ, 20 முதல் 25 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதால் தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியில் இருந்து சிராக் பஸ்வான் கட்சி வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் எதிர்க்கட்சிகளின் ‘மெகா’ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வராமல் முடங்கியுள்ளது. குறிப்பாக, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு எண்ணிக்கை மற்றும் செல்வாக்கு மிக்க தொகுதிகளைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. நேற்று முன்தினம் இரவு நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, காங்கிரஸுக்கு சுமார் 54 இடங்களை ஒதுக்க ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், காங்கிரஸ் கட்சி கூடுதலாக 10 இடங்களைக் கோருவதில் உறுதியாக உள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று இரவு மீண்டும் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்கிடையில், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி, தங்களுக்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஒதுக்கிய 19 இடங்களை நிராகரித்துள்ளது.

கடந்த சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல்களில் அதிக வெற்றி விகிதத்தைக் கொண்டிருப்பதால், தங்களுக்கு சுமார் 30 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. மற்றொருபுறம், முகேஷ் சஹானியின் விஐபி கட்சிக்கு 12 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சி 20க்கும் மேற்பட்ட இடங்களையும், துணை முதலமைச்சர் பதவியையும் கோருகிறது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, பசுபதி பராஸின் ராஷ்ட்ரிய லோக் ஜனதா கட்சி மற்றும் ஐ.பி குப்தாவின் இன்சூசிவ் கட்சி ஆகியவற்றுக்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தங்களது ஒதுக்கீட்டில் இருந்து இடங்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் மட்டும் சுமார் 140 இடங்களில் போட்டியிட விரும்புவதே இந்த இழுபறிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. இதற்கு காரணம் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மை பலத்திற்கு 122 தொகுதிகள் தேவை என்பதால், தனிப்பெரும்பான்மை வெற்றி பெறுவதற்கான வியூகங்களுடன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் காய்களை நகர்த்தி வருகிறார்.

இருப்பினும், அடுத்த இரண்டு நாட்களில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, தேஜஸ்வி யாதவை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கும் முடிவும் எடுக்கப்படும் என கூட்டணி வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. நாளை மறுநாள் (அக். 10) 121 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், ஆளும் கட்சி, எதிர்கட்சி கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இழுபறி நீடிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.