கர்நாடகாவில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க திட்டம்; நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் முயற்சி தோல்வி: எதிர்கட்சிகளான பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் குழப்பம்
பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் முயற்சியில் போதிய எண்ணிக்கை பலம் இல்லாததால் எதிர்க்கட்சிகள் இடையே தயக்கம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வருகிறது. முதல்வர் சித்தராமையா - துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இடையிலான மோதலை, கட்சித் தலைமை தலையிட்டு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. பெலகாவியில் வரும் 8ம் தேதி சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர பாஜக மற்றும் மஜத கட்சிகள் திட்டமிட்டிருந்தன. 224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்குச் சுயேச்சைகள் உட்பட 142 உறுப்பினர்களின் அமோக ஆதரவு உள்ளது.
ஆனால், எதிர்க்கட்சியான பாஜகவிடம் 66 இடங்களும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியிடம் (மஜத) 19 இடங்களும் மட்டுமே உள்ளன. ஆளுங்கட்சிக்கு எதிராகப் போதிய எண்ணிக்கை பலம் இல்லாத நிலையில், தீர்மானத்தைக் கொண்டுவந்தால் அது நிச்சயம் தோல்வியடைவதுடன், பொதுவெளியில் தங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிடும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் அஞ்சுகின்றனர். மேலும், தீர்மானம் தோல்வியடைந்தால் அது முதலமைச்சர் சித்தராமையாவின் கரத்தை வலுப்படுத்துவதுடன், உட்கட்சி பூசலில் சிக்கியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒன்றிணைய வாய்ப்பாக அமைந்துவிடும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.இதுமட்டுமின்றி, ஒருமுறை நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டால், அடுத்த 6 மாதங்களுக்கு மீண்டும் தீர்மானம் கொண்டுவர முடியாது என்ற விதியும் எதிர்க்கட்சிகளை யோசிக்க வைத்துள்ளது.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா கூறுகையில், ‘கூட்டணி கட்சியான மஜதவுடன் இதுபற்றி ஆலோசித்தோம்; ஆனால் அதிகாரப்பூர்வ முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை’ என்று தெரிவித்துள்ளார். ஊழல் மற்றும் விவசாயப் பிரச்னைகளை எழுப்புவதற்கே முன்னுரிமை அளிக்கப் போவதாக மஜத தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையே, ‘எதிர்க்கட்சிகளின் இந்தத் திட்டம் வெறும் நாடகம்; அதைத் தீவிரமாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்’ என்று காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகியோர் சவால் விடுத்துள்ளனர். உத்தேசத் தீர்மானம் தோல்வியடைந்தால் ‘அட்ஜஸ்ட்மென்ட் அரசியல்’ என்ற விமர்சனம் எழும் என்பதால், இந்த விவகாரத்தில் பாஜக மற்றும் மஜத பின்வாங்கும் சூழல் உருவாகியுள்ளது.

