என்ன ஆறுதல் கூறினாலும் இழப்பை ஈடு செய்ய முடியாது 2 நாளில் 33 பேரிடம் விஜய் வீடியோ காலில் பேசி உள்ளார்: தவெக கொள்கை பரப்பு பொது செயலாளர் பேட்டி
கரூர்: என்ன ஆறுதல் கூறினாலும் அந்த இழப்பை ஈடு செய்ய முடியாது. 2 நாளில் 33 பேரிடம் விஜய் வீடியோ காலில் பேசி உள்ளார் என தவெக கொள்கை பரப்பு பொது செயலாளர் தெரிவித்துள்ளார். கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலியான சம்பவம் நடந்து 11 நாட்களுக்கு பலியானவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் வீடியோ காலில் கடந்த சில நாட்களாக ஆறுதல் கூறி வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து தவெக கொள்கை பரப்பு பொது செயலாளரும், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியான அருண்ராஜ் மற்றும் சில நிர்வாகிகள் கரூர் சென்று, பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து விஜய்க்கு வீடியோ கால் செய்து கொடுத்து உள்ளனர்.
இதுகுறித்து, கரூரில் நேற்று நிருபர்களுக்கு தவெக கொள்கை பரப்பு பொது செயலாளர் அருண்ராஜ் அளித்த பேட்டி: விஜய் கரூர் வந்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க அனுமதி கேட்டு டிஜிபியிடம் இமெயில் மூலம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தவெக சார்பில் நேரிலும் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, பாதிக்கப்பட்டவர்களிடம் வீடியோ காலில் பேச வேண்டும் என விஜய் விருப்பப்பட்டார். அதனால், கடந்த 2 நாட்களாக 33 பேரிடம் விஜய் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறினார். நான் உங்க கூட இருப்பேன், நேரில் வந்து சந்திப்பேன் என கூறியுள்ளார். என்னதான் ஆறுதல் கூறினாலும் அந்த இழப்பு ஈடு செய்ய முடியாது. கரூர் மாவட்டத்தை சுற்றிலும் உள்ள மற்ற மாவட்ட பகுதிகளில் உள்ளவர்களிடமும் விஜய் வீடியோ காலில் பேச உள்ளார்.
எந்தமாதிரி பாதுகாப்பு தர வேணும் என கூறுவதற்கு எங்களுக்குள் ஒரு கோஆர்டினேசன் மீட்டிங் நடத்தவும் டிஜிபி அலுவலகத்தில் அனுமதி கேட்டுள்ளோம். இதுபோன்ற நிகழ்வு இனி நடக்ககூடாது, தேவையான பாதுகாப்புடன் மக்களை சந்திக்க வேண்டும் என்பதுதான் விஜய்யின் விருப்பம். கூட்டத்திற்கு வந்த அனைவரும் அன்பால் வந்தவர்கள். ஒருத்தருக்கு கூட விஜய் மீதோ, கட்சி மீதோ எந்த வருத்தமும் இல்லை என்பதுதான் உண்மை. அரசின் செயல்பாடுகள் குறித்து இந்த நேரத்தில் கருத்து கூறக்கூடாது. விசாரணை நடக்கட்டும். பின்னர் பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.