Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பயன் இல்லை

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) பணியை தேர்தல் ஆணையம் துவங்கி விட்டது. தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து, வாக்காளர் பட்டியலில் பாஜ எப்படியெல்லாம் மோசடி செய்திருக்கிறது என்று, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆணித்தனமான குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வருகிறார். கேரள மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் எதிர்க்கின்றனர். எஸ்.ஐ.ஆர்-க்காக வழங்கப்படும் கணக்கீட்டு படிவத்திலேயே பல்வேறு பிரச்னைகள், குழப்பங்கள் உள்ளது.

பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். எந்த வாக்காளர் விண்ணப்பிக்கிறாரோ அவர் பெயரோ? அல்லது உறவினர் பெயரோ? சிறிய தவறு இருந்தால் கூட, தேர்தல் ஆணையம் அந்த படிவத்தை ஏற்று கொள்ளாமல், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கிவிடும் ஆபத்து இருக்கிறது. ஆனாலும் எஸ்.ஐ.ஆரை எதிர்த்து திமுக, சட்ட போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. அரசியல் ரீதியாகவும் எதிர்க்க இன்று திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டத்தையும் நடத்துகிறது. மேலும் எஸ்.ஐ.ஆர். குறித்து விளக்கம் பெற திமுகவினர் மற்றும் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு உதவிடும் வகையில் உதவி மையங்களையும் அறிவித்துள்ளது.

எஸ்.ஐ.ஆர் குறித்து தெரியாத அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறது. களப்பணியில் உள்ள அதிமுகவினர், எஸ்ஐஆர் படிவங்கள் பூர்த்தி செய்வதில் உள்ள சிக்கல்களை உணர்ந்துள்ளனர். தங்களது பெயர்கள் கூட விடுபடலாம் என அச்சம் தற்போது தான் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிமுக தலைமையோ எஸ்ஐஆர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் திமுக தவறான தகவலை பதியவைத்தால் சரி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அதிமுக வழக்கில் இணைந்துள்ளது. கால அவகாசம் போதாது என திமுக சொல்கிறது.

ஆனால் 8 நாட்களில் அனைத்து வீடுகளுக்கும் இந்த படிவத்தை கொடுத்துவிடலாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று கூறுகிறார். எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் நேற்று கூடுதலாக மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, எஸ்ஐஆர் மூலம் திமுகவை அழிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் எடுபடாது. எஸ்ஐஆரை அதிமுக ஆதரித்து கொண்டிருக்கிறது. எஸ்ஐஆரை எதிர்க்க அதிமுகவுக்கு தைரியம் இல்லை. எஸ்ஐஆர் என்பது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

எதிரிகள் புதுப்புது உத்திகளோடு நம்மை தாக்க புதுப்புது முயற்சிகள் எடுக்கின்றனர். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் என்ற ஆயுதத்தை எடுத்து திமுகவை அழிக்க நினைக்கின்றனர். நிற்க நேரமில்லாமல் நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன். சிறிய சிறிய தடைகளை பார்த்துக்கூட நமது திமுக இயக்கம் நின்றதே இல்லை. ஏங்கிக் கொண்டே இருந்தால் அது ஏக்கம், இயங்கிக் கொண்டே இருந்தால்தான் அது இயக்கம் என புது உத்வேகத்துடன் பேசியுள்ளார். எஸ்ஐஆர் பிரச்னை அறிந்து திமுக தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் அதிமுக, பாஜ உள்ளிட்ட கட்சிகளுக்கு தீவிர திருத்தத்துக்கு பிறகு வாக்காளர் பட்டியல் வெளியாகும்போது பாதிப்பு யாருக்கு என்பது தான் தெரியும். அப்போது அழுது புலம்பி எந்த பயனும் கிடையாது.