இருமொழிக் கொள்கையில் படித்ததால் தான் உலகமெங்கும் தமிழர்கள் பல்வேறு முக்கிய பொறுப்பு வகிக்கிறார்கள்: மாணவர்கள் நலனில் அரசியல் வேண்டாம்; தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி
சிவகங்கை: இருமொழி கொள்கையால் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய அளவில் தமிழர்கள் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். தமிழ்நாடு திறன் வாய்ந்த மாநிலமாக இருக்க இருமொழிக் கொள்கையே காரணம் என்று, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான அடைவுத் தேர்வு குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: எல்லோரும் அனைத்து மொழிகளும் கற்றுக்கொள்ள வேண்டும். இதில் தவறு கிடையாது. ஆனால் இந்த மொழியைத்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது. இருமொழிக் கொள்கையால் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய அளவில் தமிழர்கள் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். கல்வியில் தமிழகம் பல்வேறு முன்னேற்றங்களை கண்டுள்ளது.
தமிழ்நாடு திறன் வாய்ந்த மாநிலமாக இருக்க இருமொழிக் கொள்கையே காரணம். அதையெல்லாம் எடுத்துக் கொள்ளாமல் மும்மொழிக் கொள்கை பற்றி மட்டுமே பேசுகின்றனர். இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கவே மூன்றாவது மொழிக் கொள்கை கொண்டு வருகிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். வீண் வாதத்துக்காக நம் மீது ஏதாவது ஒன்றை திணிக்க ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. மாணவர்கள் நலனில் அரசியல் செய்வது யார் என மக்களுக்கு தெரியும். ஒவ்வொரு ஆண்டும் எவ்வாறு நிதி ஒதுக்கினார்களோ, அதேபோல தொடர்ந்து நிதி வழங்க வேண்டும்.
கடைசி இரண்டு ஆண்டுகள் மட்டும் நிதி ஒதுக்காமல் முரண்பாடு காட்டுவது தவறு. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து புள்ளிவிவரங்களை அறிந்து பேச வேண்டும். அரசியலுக்காக பேசக்கூடாது. மார்ச் 1 முதல் 4,07,379 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு 8,388 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மேலும் 3,277 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பதில் புதிய நியமனங்கள் தொடரும். துறையூரில் பள்ளிக் கட்டிடம் ஒன்று சேதமடைந்தது குறித்த புகார் வந்துள்ளது. கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரரை பிளாக் லிஸ்டில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் குறித்து இரண்டு முறை ஆலோசனை நடந்துள்ளது. மீண்டும் அவர்களையும் அழைத்துப் பேச உள்ளோம். அதன் பிறகு அவர்களை பணி நியமனம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு தெரிவித்தார். சென்னை ஐஐடியில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மூன்றாவது மொழியை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்துக்கு கல்வி நிதி வழங்க முடியும் என்று கூறியிருந்த நிலையில், அவரது பேச்சுக்கு பதிலடியாக அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.