Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

எவ்ளோ முறை சொன்னாலும் நோபல் பரிசு இல்லை வரி அச்சுறுத்தல் மூலம் இந்தியா பாக். போரை நிறுத்தினேன்: அதிபர் டிரம்ப் மீண்டும் தம்பட்டம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியது தான்தான் என மீண்டும் கூறி உள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரான் பள்ளதாக்கு பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 25 சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த 4 நாள் போர் மே 10ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த போரை தடுத்து நிறுத்தியது நான்தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே 30 முறைக்கும் மேல் கூறி உள்ளார். இதேபோல் மேலும் பல போர்களை நிறுத்திய தனக்கு நோபல் பரிசு தர வேண்டும் என வௌிப்படையாகவே மீண்டும், மீண்டும் கேட்டு வருகிறார்.

அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ளது. ஆனால் அந்த பரிசு டிரம்ப்புக்கு கிடைக்காது என்பது உறுதியான நிலையில், நேற்று முன்தினம் டிரம்ப் வௌ்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “வரலாற்றில் இதுவரை வேறு யாரும் இத்துனை போர்களை நிறுத்தி இருக்க மாட்டார்கள். ஆயினும், நர்வேஜியன் கமிட்டி எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை தராமல் இருப்பதற்கான காரணங்களை எப்படியாவது தேடி கண்டுபிடிக்கும்” என வௌிப்படையாக புலம்பி இருந்தார். அத்துடன், அமைதி அதிபர் என்ற அடைமொழியுடன் கூடிய டிரம்ப்பின் புகைப்படம் ஒன்றை வெள்ளை மாளிகை பகிர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியது நானே என டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பாக்ஸ் நியூஸ் சேனலுக்கு பேட்டி அளித்த டிரம்ப், “இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இருநாடுகளிலும் கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றவும், அமைதி ஏற்படுத்தவும் விரும்பினேன். அதற்காக, நீங்கள் இருவரும் மோதலை நிறுத்தாவிட்டால், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய முடியாது என மிரட்டினேன். மேலும், இருநாடுகளுக்கும் அதிக வரி விதிப்பேன் என மிரட்டியதால், இருநாடுகளும் போரை கைவிட்டன. நாங்கள் ஏழு போர்களை நிறுத்தி உள்ளோம். அதில் 5 போர்களை அமெரிக்காவில் வர்த்தகம் செய்வதை வைத்து மிரட்டியே நிறுத்தினேன்” என கூறி உள்ளார்.