திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசலில் அமமுக தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை வகித்து பேசியதாவது: துரோகத்தை வீழ்த்துவதற்காக தான் அமமுக துவங்கப்பட்டது. ஆட்சி அதிகாரத்தை நம்மால் பெற்ற பழனிசாமி ஆர்.கே.நகர் இடைதேர்தலின்போது அம்மாவை (ஜெயலலிதாவை) கொலை செய்தவர்கள் என நம் மீது வீண்பழி சுமத்தினார். என்னை தோற்கடிப்பதற்காக அங்கு ஒரு ஓட்டுக்கு ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை பழனிசாமி மூலம் பணம் வழங்கப்பட்ட பின்னரும் கூட உண்மையானவர் யார் என அந்த தொகுதி மக்கள் அறிந்து 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்தனர்.
கடந்த ஏப்ரல் 11ம் தேதி தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கனவே என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியே போன பழனிசாமியை பிடித்து வந்து கூட்டணியில் சேர்த்தார். அப்போது அதிமுகவை சேர்ந்தவர் தான் முதல்வர் என்று கூறினாரே தவிர பழனிசாமி தான் முதல்வர் என்று கூறவில்லை. ஆனால் துரோகத்துக்கு பெயர் போன பழனிசாமியோ தான் தான் முதல்வர் என கூறி வருவதை பாஜவை சேர்ந்த சிலரும் ஆதரித்து வருகின்றனர். அதன்பின்னர் தான் கூட்டணியிலிருந்து அமுமுக வெளியேறியுள்ளது.
2021ம் ஆண்டு தேர்தலின்போது பழனிசாமியை முதல்வராக விடாமல் தடுத்தோம். ஆனால் வரும் தேர்தலில் பழனிசாமியை வீழ்த்தாமல் விடமாட்டோம். எவ்வளவு பண மூட்டைகளை அவிழ்த்தாலும் அதை அமுமுக தொண்டர்கள் முறியடித்து துரோகத்தை வீழ்த்துவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.