Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எந்த உணவுக்கும் மாட்டுப்பால் இல்லை!

திருவான்மியூர் பஸ் நிலையம் எதிரே காமராஜ் நகர் 3வது தெருவில் அமைந்திருக்கும் விரிடியன் ப்ளேட் உணவகம், பார்ப்பதற்கு ஒரு உணவகம் போலவே தெரியவில்லை. சுற்றிலும் பசுமையான மரங்கள். அதன் நடுவில் இயற்கையோடு இயற்கையாக ஒரு கிராமத்துச் சூழலில் அமைந்திருக்கும் அழகிய பண்ணை வீடு போல் இருக்கிறது. தோற்றம் மட்டுமில்லை. இங்கு கிடைக்கும் உணவுகளும் இயற்கை சார்ந்ததாகவே இருக்கின்றன. அனைத்து உணவுகளும் சுத்த சைவம். இதில் ஹைலைட் மாட்டுப்பால், தயிர் கூட பயன்படுத்தப்படவில்லை என்பதுதான். எந்த உணவாக இருந்தாலும், ஸ்நாக்சாக இருந்தாலும், பானமாக இருந்தாலும் தேங்காய்ப்பால், சோயா பால், முந்திரிப் பால், மணிலாப் பால் என முழுக்க முழுக்க தாவரம் சார்ந்த பாலில் இருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. இதை ஒரு முன்மாதிரி வாழ்வியலாகவும் கடைபிடிக்கிறார்கள் இந்த உணவகத்தின் உரிமையாளர்களான காயத்திரியும், ஷங்கரும். இவர்களை ஒரு மாலைப் பொழுதில் சந்தித்தோம்.

தமது கணவர் ஷங்கரை அறிமுகப்படுத்திவிட்டு தங்களது உணவகம் பற்றி பேச ஆரம்பித்தார் காயத்திரி.``நான் சென்னைதான். எனது கணவர் வட இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வசித்தவர். இப்போது எங்களுடன் சென்னையிலேயே வசிக்கிறார். நான் எம்பிஏ படித்திருக்கிறேன். பிசினஸ் செய்ய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். சமையலில் ஆர்வம். நாங்கள் சைவ உணவுதான் சாப்பிடுவோம். எனது மகள் பசும்பால் உள்ளிட்ட எந்த விலங்கினங்களின் பாலையும் பயன்படுத்தக்கூடாது என்ற கொள்கை உள்ளவர். எங்களையும் அதுபோல் மாற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நல்ல விசயம்தானே, மாறிக்கொள்வோம் என மாறிவிட்டோம். இதற்காக பல ரெசிபிகளை பசும்பால் இல்லாமல் தேங்காய்ப்பால், சோயாபால், முந்திரிப்பால் உள்ளிட்டவற்றை வைத்து செய்ய ஆரம்பித்தேன். எனது கணவருக்கும், மகளுக்கும் மிகவும் பிடித்துப்போனது. அதேநேரம் நாங்கள் வெளியில் சாப்பிடப்போனால் இப்படி வகை வகையான ரெசிபிகள் கிடைக்காது.

பால் கலக்காத உணவு வேண்டும் என்றால் ஏதாவது ஒன்றிரண்டு அயிட்டங்கள்தான் கிடைக்கும். எல்லா அயிட்டங்களும் கிடைக்கும்படியான ஒரு உணவகத்தை நாமே ஏன் ஆரம்பிக்கக் கூடாது? என யோசித்தேன். அதன்படியே ஒரு உணவகத்தைக் கடந்த 2018ம் ஆண்டில் புதுச்சேரியில் தொடங்கினோம். அப்போது எனது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் இங்கேயே வந்து எனது தொழிலுக்கு உறுதுணையாக இருந்தார். புதுச்சேரிக்கு நிறைய சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். அவர்களில் பலர் எங்கள் உணவகத்தைத் தேடி வந்து பால் கலக்காத உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். நமது நாட்டு மக்களும் பலர் வரவேற்பு அளித்தார்கள். அங்கு சமையல் சரியாக தெரியாத பெண்களை, குடும்பத்திற்கு வருமானம் தேவை என விரும்பிய பெண்களைத் தேர்ந்தெடுத்து எங்களது சமையல் முறையைக் கற்றுக் கொடுத்து உணவகத்தை நடத்தினோம். இதன்மூலம் கஷ்டப்படும் பெண்களுக்கு நம்மால் முடிந்த வருமானத்தைக் கொடுக்கிறோம் என்ற நிறைவும் கிடைத்தது. உணவகம் நன்றாக சென்றுகொண்டிருந்த நிலையில் கொரோனா பீதி வந்தது. அப்போது பல தொழில்கள் முடங்கியதுபோல எங்களது உணவகமும் முடங்கியது. மீண்டும் சென்னைக்கு வந்துவிட்டோம்.

கொரோனா பீதி அடங்கி, பல தொழில்கள் மீண்டும் மலரத் தொடங்கின. எங்கள் உணவகத்தை விரிடியன் பிளேட் என்ற பெயரில் இந்த இடத்தில் 2022ம் ஆண்டில் துவக்கினோம். ஆரம்பத்தில் சற்று சிரமமாகத்தான் இருந்தது. இப்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எங்கள் உணவகத்தை பிளாண்ட் பேஸ்டு ரெஸ்டாரென்ட் என்ற அடைமொழியோடே ஆரம்பித்திருக்கிறோம். அதன்படி முழுக்க முழுக்க பசும்பால் இல்லாமல் பல உணவுகளைத் தயார் செய்து கொடுக்கிறோம். எங்களது உணவகத்தின் மற்றொரு சிறப்பு, அவ்வப்போது ஃப்ரெஷ்ஷாக தயார் செய்து கொடுப்பது. இங்கு ஆர்டர் செய்தபிறகே எந்தவொரு ஃபுட்டையும் தயார் செய்கிறோம். வெங்காயத்தைக் கூட நறுக்கி வைக்க மாட்டோம். நறுக்கி வைத்த வெங்காயத்தில் காற்று பட்டால் சில ரசாயன மாற்றங்கள் நிகழும் என்கிறார்கள். இதனால் நாங்கள் ஃபிரஷ்ஷாகவே கட் செய்வோம். வெங்காயம் வேண்டாம், பூண்டு வேண்டாம், பச்சை மிளகாய், தேங்காய் வேண்டாம் என சில கூறுவார்கள். அவர்களுக்கு அவர்களது விருப்பம் போலவே உணவைத் தயாரிக்கிறோம். அதுவரை அவர்கள் டைம் பாஸ் செய்ய இங்கு பல புத்தகங்களை வைத்திருக்கிறோம். அவர்கள் அதைப் படிப்பார்கள்.

குழந்தைகள் விளையாட சில கேம்களை வைத்திருக்கிறோம். இப்போது உணவகத்திற்கு சென்றாலும் பலர் செல்போனைத்தான் பார்க்கிறார்கள். நமது உணவகத்திற்கு குடும்பத்தோடு வந்தால் சிரித்து அளாவலாம். படிக்கலாம், விளையாடலாம். நமது உணவகத்தில் ஃப்ரூட் சாலட், சப்பாத்தி, பூரி, ஆல பாலக், கோபி மஞ்சூரியன், சப்ஜி, பாஸ்தா, நூடுல்ஸ், பிரியாணி, ரோஸ்மில்க், ஃப்ரைடு ரைஸ், கூல்ட்ரிங்ஸ், டீ என பலவும் தருகிறோம். எதற்குமே பசும்பால் சேர்க்க மாட்டோம். மணிலாவில் பால் எடுத்து தயிர் சாதம் செய்கிறோம். இது பசும்பால் தயிர்போலவே இருக்கும். சிலர் என்ன பசும்பால் தயிரா? என்றுகூட கேட்பார்கள். மணிலா போன்றவற்றில் இருந்து பால் எடுத்தாலும் அதன் பிரத்யேக சுவை தெரியாமல், ஒரிஜினலான பால் போலவும் தயிர் போலவும் மாற்ற சில தொழில்நுட்பங்களைக் கையாள்கிறோம். அதுவும் கெமிக்கல்தனமில்லாததாகவே இருக்கும். எங்களிடம் கிடைக்கும் ஜாக் புரூட் பிரியாணி வேற லெவலில் இருக்கும்.

இந்த பிரியாணி லிமிட்டெடாக சில உணவகங்களில் மட்டுமே கிடைக்கும். இதை நாங்கள் யுனிக்காக செய்கிறோம். அதேபோல செட்டிநாடு பெப்பர் டோப்பு எங்களின் யுனிக் உணவாக இருக்கும். சாக்லேட், கேரட் அல்வா என பல ஸ்வீட்களை பால் கலக்காமல், நெய் கலக்காமல் செய்கிறோம். இதற்கு பேரீச்சம்பழத்தைப் பயன்படுத்துவோம். உணவகம் மட்டுமில்லாமல் சில ஈவென்ட்களை நடத்தி இதுபோன்ற உணவுகளை மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். சில பிரச்னைகளுக்கு பாலைத் தவிர்க்க வேண்டும் என சில டாக்டர்கள் அறிவுறுத்துவார்கள். அதுபோன்ற நபர்கள் நமது உணவகத்தை நாடி வருகிறார்கள். இப்படியொரு உணவகத்தை நடத்தி வருவது எங்களுக்கு பெருமையாகத்தான் இருக்கிறது’’ என நெகிழ்ச்சியுடன்

கூறி முடித்தார் காயத்திரி.

-அ.உ.வீரமணி

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்.

இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்!

உத்தரப்பிரதேசம்:

இறைச்சியால் செய்யப்பட்ட வடை போன்ற ஒருவித உணவு காலுவாதி கபாப். இது உத்தரப்பிரதேசத்தில் மிகவும் பிரபலமான காலை டிபன். பெரிய உணவு விடுதிகள் தொடங்கி சாலையோரக் கடைகள் வரை உத்தரப்பிரதேசத்தில் எங்கு சென்றாலும் காலுவாதி கபாப் என்னும் இந்த இறைச்சி வடையை

ருசிக்கிறார்கள்.

மகாராஷ்டிரா:

சபுதானா கிச்சடி,சாகோ (ஜவ்வரிசி) விதைகளுடன் தயாரிக்கப்பட்ட சபுதானா கிச்சடிதான்

மகாராஷ்டிர மாநிலத்தின் ஆரோக்கியமான காலை உணவு. சுவையில் சிறந்த இந்த உணவை பலர் காலையில் விரும்பி ருசிக்கிறார்கள். இதேபோல வடாபாவும் மராட்டியர்களின் புகழ்பெற்ற காலை உணவு. காலையில் எழுந்ததுமே சாயாவுடன் வடாபாவ் ருசிக்கப்படுகிறது. இது இந்தியாவின் பர்கர் என்று கூட வர்ணிக்கப்படுகிறது. மராட்டியர்களின் வடாபாவ்

தற்போது பல ஊர்களிலும் பிரபலம் அடைந்து வருகிறது.